ADDED : செப் 18, 2026 04:51 PM
சாணார்பட்டி, செப்.19-
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வைக்கோல் லோடு ஏற்றிய லாரி மீது ஏறிய சிறுவன் மின்கம்பி உரசியதில் உடல் கருகி பலியானார்.
மார்க்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் 45. இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து வைக்கோல் வாங்கி வந்து சாணார்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடை வளர்ப்போருக்கு விற்பனை செய்து வருகிறார்.
நேற்று காலை டிரைவர் தினேஷ்குமார் தஞ்சாவூரில் இருந்து வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு சாணார்பட்டி அருகே எல்லப்பட்டிக்கு வந்து லாரியை நிறுத்தினார். கணேசனின் மகன் பெரியகருப்பன் 15, வைக்கோலை மூடி வைத்திருந்த தார்பாயை அகற்ற லாரி மீது ஏறினார்.
லாரி நின்றிருந்த பகுதியில் செல்லும் உயர் மின்அழுத்த கம்பி அவர் மீது உரசியது. மின்சாரம் பாய்ந்ததில் பெரியகருப்பன் உடல் கருகி பலியானார். வைக்கோலும் தீப்பற்றி எரிய துவங்கியது. அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றனர்.
தகவலறிந்த திண்டுக்கல் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். சாணார்பட்டி போலீசார் சிறுவனின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
