/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுமலையில் பூத்து குலுங்கும் காபி பூக்கள்
/
சிறுமலையில் பூத்து குலுங்கும் காபி பூக்கள்
ADDED : மார் 25, 2025 07:27 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் காபி பயிர்களில் பூக்கள் பூத்துள்ள நிலையில் நிலையான விலையை நிர்ணயம் செய்ய வாரியம் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
திண்டுக்கல்லிலிருந்து 20 கிலோ மீட்டர் துாரத்தில் சிறுமலை உள்ளது. இங்கு வாழை, பலாவுடன் 1000 ஏக்கருக்கு மேல் காபி விவசாயமும் நடக்கிறது. இங்கு தயாராகும் காபி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல், மே யில் காபி பயிர்களில் பூக்கள் பூக்க தொடங்கி காய்களாக காய்த்து, பழமாகி பின் அறுவடை செய்யப்படும். இந்த ஆண்டிற்கான சீசன் தற்போது துவங்கிய நிலையில் சிறுமலை, தாழக்கடை, புதுார், தென்மலை உள்ளிட்ட பகுதிகளில் காபி பயிர்களில் வெள்ளை நிற பூக்கள் பூத்து குலுங்குகிறது. சுற்றுலா பயணிகளை அதன் வாசம் கவருகிறது. சிறுமலை முழுவதும் 100க்கு மேற்பட்ட விவசாயிகள் காபி விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். தற்போது சர்வதேச மதிப்பில் காபி விலை அதிகரித்துள்ளதால் உற்பத்தி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
முதற்கட்டமாக பூக்கள் பூக்க தொடங்கியிருப்பதால் தண்ணீர் பாய்ச்சுதல், நோய் பாதிப்புகள் தென்பட்டால் மருந்து தெளித்தல், களை எடுத்தல் போன்ற பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். காபி பழங்கள் செடிகளில் காய்த்த பிறகு இயந்திரங்கள் மூலம் அறைத்து உலர வைத்து வியாபாரிகளிடம் விற்பனை செய்யப்பகிறது.
வாரியம் தேவை
சிறுமலை காபி விவசாயி விக்னேஷ் தியாகராஜன் கூறியதாவது: காபி பயிர்களை பல ஆண்டுகளாக உற்பத்தி செய்கிறேன். தற்போது இதற்கான வாரியம் இல்லாமலிருப்பதால் தனியார் நிறுவனங்கள், வியாபாரிகளிடம் நேரடியாக விற்பனை செய்யும் நிலை உள்ளது. இதனால் காபி பயிர்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. காபி வாரியம் அமைத்து அதன்மூலம் நிலையான விலையை நிர்ணயித்து நேரடியாக விவசாயிகள் உற்பத்தி செய்த காபியை விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.