/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆக்கிரமிப்பால் தாராபுரம் ரோட்டில் தொடரும் நெரிசல்
/
ஆக்கிரமிப்பால் தாராபுரம் ரோட்டில் தொடரும் நெரிசல்
ADDED : பிப் 13, 2024 06:38 AM

ஒட்டன்சத்திரம் : ரோடு விரிவாக்கம் செய்யப்பட்ட பின்பும் ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் நெரிசல் குறைந்தபாடில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
ஒட்டன்சத்திரம் நகரப் பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் இங்கு தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. நெரிசலை குறைக்கும் வகையில் ஒட்டன்சத்திரம் நகரை சுற்றி செல்லும் வகையில் திண்டுக்கல் ரோட்டில் உள்ள லெக்கையன்கோட்டையில் இருந்து பழநி ரோட்டில் உள்ள அரசப்பபிள்ளைபட்டி பிரிவு வரை பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் பயனாக ஒட்டன்சத்திரம் நகருக்குள் செல்லாமல் பழநி, தாராபுரம் வழித்தடங்களில் வாகனங்கள் செல்ல வழி வகை செய்யப்பட்டது. பஸ்சை தவிர்த்து ஏனைய வாகனங்கள் இந்த பைபாஸ் ரோடு வழியாக சென்றதால் போக்குவரத்து நெரிசல் குறைவது போல் தோன்றியது.
ஆனால் தாராபுரம் ரோடு நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்யப்பட்ட போதிலும் ஆக்கிரமிப்பு காரணமாக பல இடங்களில் ஒரு வழி பாதையாக உள்ளது.
மேலும் இந்த வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் நடுரோட்டிலேயே நின்று பயணிகளை ஏற்றி செல்வதால் பஸ் நகரும் வரை பஸ்சின் பின்புறம் வாகனங்கள் நிற்க வேண்டிய நிலை உள்ளது.
தும்மிச்சம்பட்டி பிரிவு பஸ் நிறுத்தத்தில் மார்க்கெட் ரோடும் தும்மிச்சம்பட்டி செல்லும் ரோடும் தாராபுரம் ரோட்டுடன் இணைகிறது. இந்தப் பகுதியில் இருசக்கர வாகனப் போக்குவரத்தும் அதிகம் உள்ளது.
இதை கருதி இந்த பஸ் நிறுத்தத்தை மாற்றி அமைக்க வேண்டும். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாக உள்ளது.
பஸ்களை நிறுத் துவதால் இடையூறு
செந்தில் அண்ணாமலை, பா.ஜ., மாநில பொதுக்குழு உறுப்பினர், ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் புதிதாக பைபாஸ் அமைக்கப்பட்ட நிலையிலும் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.
ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் பயணிகளை ஏற்றி செல்லும் பஸ்கள் நடு ரோட்டிலே நிறுத்தப்படுவதால் அடுத்தடுத்து வரும் வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.
இருசக்கர வாகனங்களில் செல்வோர் பஸ் செல்லும் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் ரோட்டுப் பகுதியிலே வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பதால் நெரிசல் குறையாமல் உள்ளது. பஸ் நிறுத்தங்களில் பஸ்கள் ஓரமாக நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஸ் நிறுத்தத்தை மாற்ற வேண்டும்
காமாட்சி ராஜா, அ.தி.மு.க., நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர், ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் தும்மிச்சம்பட்டி பிரிவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிக்னல் அமைக்க வேண்டும்.
மேலும் போக்குவரத்து விதிகளுக்கு மாறாக ஒரு வழி பாதையில் இருசக்கர வாகனங்கள் அதிகமாக இயக்கப்படுகின்றன.
இப்பகுதியில் போக்குவரத்து போலீசாரை நிறுத்தி நெரிசலை ஒழுங்கு படுத்த வேண்டும்.
ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தும்மிச்சம்பட்டி பிரிவு பஸ் ஸ்டாப்பை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.