/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடியிருப்பு சேதத்தால் தினம் தினம் அச்சம்
/
குடியிருப்பு சேதத்தால் தினம் தினம் அச்சம்
ADDED : மார் 09, 2024 09:06 AM

நத்தம் : -நத்தம் சாணார்பட்டி அருகே செங்குறிச்சி ஜே.ஜே.நகரில் 31 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படும் நிலையில் உள்ளதால் குடியிருப்பு வாசிகள் தினமும் அச்சத்தில் உள்ளனர்.
சாணார்பட்டி அருகே செங்குறிச்சி ஊராட்சி உட்பட்ட ஜெ.ஜெ.காலனியில் 31 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் 28 தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. 100-க்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தற்போது தொகுப்பு வீடுகள் பராமரிப்பின்றி எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இந்த வீடுகளின் கூரை அவ்வப்போது இடிந்து விழுவதும் சமையல் செய்யும்போது கூரை மணல் துகள்கள் சாப்பாட்டில் விழுவது வாடிக்கையாக உள்ளது.
வீட்டின் அஸ்திவாரமும் சேதமடைந்துள்ளது. வீட்டில் வசிக்கும் சிறுவர்கள் ,முதியவர்கள் துாங்கும் போது சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழ பலரும் காயமடைகின்றனர். சில வீடுகள் முற்றிலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் சிலர் வீடுகளை காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டனர்.
சில வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டம் ஆகி விட்டது. மீதமுள்ள வீடுகளில் உள்ளவர்கள் வேறு இடத்திற்கு செல்ல முடியாத நிலையில் ஆபத்தான நிலையில் தினம் தினம் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.
இன்னும் ஒரு சிலர் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள வீட்டின் முன்புறம் தாழ்வாரமாக செட் அமைத்து அதில் சமையல் செய்து குடும்பம் நடத்தி வருகின்றனர். மழை காலங்களில் மழைநீர் கூரை வழியாக உள்ளே வடியாதபடி மேலே தார்பாய்கள் கொண்டு மூடி பாதுகாப்பான நிலையை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
கழிப்றைககளும் பயன்படுத்த முடியாத நிலையில் வெறும் காட்சிப்பொருளாக உள்ளது. பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் முன் தொகுப்பு வீடுகளை பராமரிப்பு செய்தும், மிகவும் சேதம் அடைந்த வீடுகளை புதியதாக கட்டித்தர வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
எல்லாம் ஆய்வோடு சரி
செல்வி, சமூக ஆர்வலர், ஜே.ஜே.நகர் காலனி: மழை காலங்களில் பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் ஒழுகுகின்றன. அதிகாரிகள் குடியிருப்புகளை ஆய்வு செய்து செல்கிறார்களே தவிர,அதனை பராமரிப்பு செய்து தர தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை.இப்பகுதியில் உள்ள பலரும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருபவர்கள். இதனால் அரசு புதிய குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும்.
உயிர் பயத்திலே - வாழ்க்கை
முருகேசன், கூலி தொழிலாளி,ஜே.ஜே.நகர் காலனி: அரசு கட்டிக்கொடுத்த குடியிருப்புகளில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கிறோம்.அனைத்து குடியிருப்புகளிலும் கூரை சேதம் அடைந்துள்ளதால் அவ்வப்போது பெயர்ந்து விழுகிறது. குழந்தைகளுடன் இரவு நேரங்களில் அச்சத்துடன் துாங்க வேண்டி உள்ளது.
ஒரு விதமான உயிர் பயத்திலே - எங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ளது. அரசு எங்கள் வாழ்வாதாரத்தை காக்க குடியிருப்புகளை புதுப்பித்து தர வேண்டும்.
தானாக விழும் கூரை
மாரியம்மாள், கூலித் தொழிலாளி : காலனியில் உள்ள தொகுப்பு வீட்டில் தான் வசிக்கிறோம். இந்த வீடுகள் கட்டப்பட்டு 31 ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போது வீடுகள் சேதம் அடைந்து மக்கள் வாழ தகுதியற்ற நிலையில் உள்ளது. வீடுகளில் சிமென்ட் கூரை பெயர்ந்து தானாக விழுகிறது. இதில் வேறு வழியின்றி தொடர்ந்து வசிக்கிறோம்.

