ADDED : டிச 20, 2024 03:19 AM

பழநி: பழநி நகராட்சி ஒன்பதாவது வார்டில் தேரோட்டம் நடைபெறும் முக்கிய வீதியான கிழக்கு ரத வீதி சேதமடைந்து மக்கள் வாகனங்களில் செல்லும்போது விபத்து சூழலை உருவாக்கி உள்ளது.
கிழக்கு ரத வீதி, மாரியம்மன் கோவில் சந்து, நடேசன் சன்னதி தெரு, கோசல விநாயகர் சந்து, அங்கண்ணன் தெரு, தெற்கு ரத வீதி, சுப்பா தெரு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதிகளில் மாரியம்மன் கோயில் தேர், பெரியநாயகி அம்மன் கோயில் தேர், தைப்பூச தேர் உள்ளிட்ட முக்கிய தேரோட்டம் நடைபெற்று வருகிறது. மாரியம்மன் கோயிலில் தற்போது கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. முக்கிய கோயில்கள் இப்பகுதியில் உள்ளதால் பழநி சுற்றுப்பகுதிகளில் இருந்து பக்தர்கள், வெள்ளி, சனி, அமாவாசை நாட்களில் அதிக அளவில் வருகை புரிகின்றனர். ஆனால் இந்த வீதி ரோடுகள் சேதமடைந்துள்ளது. இதனால் பக்தர்கள் மட்டுமன்றி பலரும் பாதிக்கின்றனர்.
நாய் தொல்லையால் விபத்து
செந்தில்குமார்,வியாபாரி, நடேசன் சன்னதி தெரு: நடேசன் சன்னதி தெரு முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இதனை விரைவில் சரி செய்ய வேண்டும்.
பாதாள சாக்கடை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும். நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். நாய் தொல்லையால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.
தேவை ரோந்து பணி
சவுந்தர்ராஜன், யானைப்பாகன், சுப்பா சந்து : வெளி நபர்கள் அதிக நடமாட்டம் உள்ளது வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடப்படுகிறது.
சந்துகளின் ஓரங்களில் போதை ஆசாமிகள் தொல்லை அதிகரித்து வருகிறது.அச்சத்துடன் நடமாட வேண்டிய சூழல் உள்ளது. போலீசார் தினமும் இப்பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும்.
மழையால் சேதம்
முத்துக்குமார், மணவறை டெக்ரேஷன், கிழக்கு ரத வீதி: கிழக்கு ரத வீதி முற்றிலும் சேதம் அடைந்து உள்ளது. தைப்பூச தேரோட்டத்தின் போது 'பேட்ச் ஒர்க்' செய்யப்பட்டு தற்போது பெய்த மழையால் சேதமடைந்துள்ளது.
இந்தாண்டு சாலையை முற்றிலும் அகற்றி புதிதாக அமைத்து தர வேண்டும். தற்போது குண்டும், குழியுமாக உள்ளதால் விபத்து ஏற்படுகிறது. நாய்,மாடு,குதிரை தெருக்களில் சுற்றி வருவதால் மிகுந்த அவதி ஏற்படுகிறது.
நிம்மதியாக வாழ வழி
புஷ்பலதா, கவுன்சிலர் (அ.தி.மு.க.,) : கிழக்கு ரத வீதி அமைக்க பழநி எம்.எல்.ஏ., நகராட்சி தலைவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கிழக்கு ரத வீதியில் பேட்ச் ஒர்க் செய்யப்பட்டு சாலை சேதமடைந்துள்ளது. இச்சாலையை புதிதாக அமைக்கப்படும்.
நாய், மாடு, குதிரை தொல்லைகளை கட்டுப்படுத்த நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். போலீஸ் ரோந்து பணிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போலீசார் இப்பகுதியில் ரோந்து பணியை தீவிர படுத்தினால் மக்கள் நிம்மதியாக வாழ வழி பிறக்கும் என்றார்.