அவசர கால, பேரிடர் மீட்பு பணிகள் மேற்கொள்வதில் சிக்கல்: போதிய பணியிடங்கள் உருவாக்க வலியுறுத்தல்
அவசர கால, பேரிடர் மீட்பு பணிகள் மேற்கொள்வதில் சிக்கல்: போதிய பணியிடங்கள் உருவாக்க வலியுறுத்தல்
ADDED : நவ 10, 2026 03:30 PM
திண்டுக்கல்: பேரிடர் மேலாண்மைத் துறையில் துணை தாசில்தார், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் என முறைப்படி பணியிடங்களை நியமனம் செய்து அவசர கால, பேரிடர் மீட்பு பணிகள் தொய்வின்றி மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பேரிடர் மேலாண்மைத் துறையானது மாறுபட்ட சீதோஷ்ண நிலை, தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை கால முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொகுத்து, அதனை விரைவாக செயல்படுத்துவதை அத்தியாவசிய பணியாக கொண்டுள்ளது.
2020ல் இத்துறைக்கு ரெகுலர் தாசில்தாரை தவிர துணை தாசில்தார், வருவாய் முதுநிலை ஆய்வாளர், உதவியாளர் என பணியிடங்கள் நியமனம் செய்திருக்க வேண்டும். ஆனால் துறை அனுமதிக்கப்பட்ட போதே தொகுப்பூதிய அடிப்படையில் ஒரு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மட்டுமே கூடுதலாக நியமிக்கப்பட்டு பணியில் உள்ளார்.
இதனால் மாவட்டம் தோறும் பருவமழை கால பேரிடர் விவரங்களை தொகுத்து மீட்பு, சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. இதனை நிவர்த்தி செய்ய திண்டுக்கல் உட்பட மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் இத்துறையில் அரசு அனுமதித்த பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகி சுகந்தி கூறியதாவது:
அரசுத்துறையில் தாசில்தார், துணை தாசில்தார், முதுநிலை வருவாய் ஆய்வாளர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் என்ற முறைப்படி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
ஆனால் வேலைப்பளு அதிகமுள்ள பேரிடர் மேலாண்மைத்துறையில் அறிவிக்கும் போதே இருந்த பணியிடங்களை ரத்து செய்து விட்டு தொகுப்பூதிய அடிப்படையில் பணியிடங்களை நியமித்தனர். இதனால் இன்று பருவமழை பாதிப்புகள் குறித்த முறையான தரவுகளை எடுக்க முடிவதில்லை. அவ்வாறு எடுத்தாலும் அதனை தொகுத்து ஆவணப்படுத்துவதில் பணிச்சுமையால் சிக்கல் நீடிக்கிறது. தமிழக அரசு உடனடியாக பேரிடர் மேலாண்மைத் துறையில் பணியிடங்களை உருவாக்கி அதில் தகுந்த ஊழியர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்றார்.
