/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காட்சிப்பொருளான சோலார் விளக்குகள்,தண்ணீர் தொட்டி
/
காட்சிப்பொருளான சோலார் விளக்குகள்,தண்ணீர் தொட்டி
ADDED : அக் 16, 2024 06:56 AM

சின்னாளபட்டி : திண்டுக்கல் -மதுரை நான்கு வழிச்சாலையில் சோலார் மின் விளக்குகள், குடிநீர் தொட்டிகள், அவசர கால அழைப்பு, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகள் காட்சி பொருளாக பயன்பாடின்றி கிடக்கின்றன.
2011 முதல் நான்கு வழிச்சாலை செயல்பாட்டிற்கு வந்தது. தோமையார்புரம் துவங்கி அண்ணாமலையார் மில்ஸ், சிறுநாயக்கன்பட்டி, கலிக்கம்பட்டி, செட்டியபட்டி, சின்னாளபட்டி புறநகர், காந்திகிராமம், அம்பாத்துறை விலக்கு, அமலிநகர், முருகன்பட்டி, பெருமாள் கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், இருபுற ரோட்டை பாதசாரிகள் கடப்பதற்கும் டூவீலர்கள் திரும்பி செல்வதற்கும் தேசிய நான்கு வழிச்சாலை நிர்வாகம் சோலார் மின் விளக்குகளை அமைத்திருந்தது. தற்போது பெரும்பாலான சோலார் பேனல்கள் சேதமடைந்த நிலையிலும், பேட்டரிகள் இல்லாத சூழலில் காட்சி பொருளாக உள்ளன. தொடர் பராமரிப்பில் நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அலட்சியப்படுத்தி வருகிறது. பெருமளவு வசதிகள் செயலிழந்து பயன்படுத்த முடியாத சூழலில் நிலையில் காட்சி பொருளாக மட்டுமே உள்ளன. விபத்துகளை காரணம் கூறி பெரும்பாலான ரோடு சந்திப்புகளை மூடிவிட்டனர். பல கிலோமீட்டர் துாரம் வீண் அலைக்கழிப்பு, எதிர்திசை பயண பிரச்னைகள் நீடிக்கிறது. காந்திகிராமம், பெருமாள்கோயில்பட்டி, பிள்ளையார்நத்தம் உட்பட பல இடங்களில் போதிய தெருவிளக்கு இல்லாது இருள் சூழ்ந்த பஸ் ஸ்டாப்பில் திறந்த வெளியில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் காத்திருக்கின்றனர். அதிகாரிகள் அலட்சியத்தால் சிரமங்களும் பாதிப்புகளும் தொடர்ந்த போதும் இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியம் காட்டி வருகின்றன.
பராமரிப்பில் அலட்சியம்
எம்.பி.பத்மநாபன்,வியாபாரி, ஆலமரத்துப்பட்டி: திண்டுக்கல் தோமையார்புரத்திலிருந்து கொடை ரோடு டோல்கேட் வரை பல இடங்களில் பஸ் ஸ்டாப்களில் குடிதண்ணீர் வசதி பெயர் அளவில் கூட இல்லை. தண்ணீர் தொட்டிகள் சேதமடைந்து பல மாதங்களாகியும் நெடுஞ்சாலைத்துறை ஆணையம் இப்பிரச்னையை கண்டு கொள்ளவில்லை. மின்விளக்கு வசதியின்றி இருள் சூழ்ந்த நிலையில் பயணிகள் பஸ் ஸ்டாப்களில் அச்சத்துடன் காத்திருக்கும் அவல நிலைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
இருளால் பாதிப்பு
ராமுத்தாய்,குடும்பத்தலைவி, கலிக்கம்பட்டி: சில வாரங்களுக்கு முன் தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியன் பகுதியில் நுாற்றுக்கு மேற்பட்ட சோலார் மின்விளக்குகளை புதிதாக அமைத்தனர். இருபுறமும் தெரியும் வகையில் விளக்குகள், அதற்கான கம்பங்களை ஏற்படுத்தினர். இருப்பினும் தற்போது வரை மின் இணைப்பு வழங்காமல் விளக்குகள் பயன்பாட்டிற்கு வரவில்லை. மாறாக இருள் சூழ்ந்து ரோட்டின் குறுக்கே கால்நடைகள், பாதசாரிகள் கடந்து செல்வது தெரிவதில்லை. வேகமாக வரும் வாகனங்களால் விபத்துக்கள் தாராளமாகிவிட்டது.
விபத்துகள் தாராளம்
சித்திரவேலு,தனியார் நிறுவன ஊழியர், முருகன்பட்டி: கிராம ஸ்டாப்பில் கூட நெடுஞ்சாலை ஆணையம் நிழற்குடையை அமைந்தது. ஆனால் காந்திகிராமம் சின்னாளபட்டி ஸ்டாப்களில் பயணிகள் பல ஆண்டுகளாக அவதிப்பட்டபோதும் தீர்வு கிடைக்கவில்லை. காந்திகிராம பல்கலை.யில் இப்பகுதி மாணவர்கள் மட்டுமின்றி வெளிமாநில, வெளிநாட்டு மாணவர்களும் படிக்கின்றனர். நுாற்றுக்கணக்கான ஊழியர்கள், சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வந்து செல்கின்றனர். பல்கலை மெயின் நுழைவாயிலில் சர்வீஸ் ரோடு இணைந்துள்ளது. திண்டுக்கல் வழித்தடத்தில் இருந்து வருவோர் மெயின் நுழைவாயிலில் இறங்கி செல்கின்றனர். மதுரை மார்க்கத்தில் இருந்து வருவோர், நான்கு வழிச்சாலையை அடுத்துள்ள மேற்கு புற சர்வீஸ் ரோட்டில் இறங்கி அதனை கடந்து மெயின் நுழைவாயிலை அடைகின்றனர்.