/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' யில் ஆக்கிரமிப்பு அகற்றம் பாதியில் நிறுத்தம்
/
'கொடை' யில் ஆக்கிரமிப்பு அகற்றம் பாதியில் நிறுத்தம்
'கொடை' யில் ஆக்கிரமிப்பு அகற்றம் பாதியில் நிறுத்தம்
'கொடை' யில் ஆக்கிரமிப்பு அகற்றம் பாதியில் நிறுத்தம்
ADDED : அக் 19, 2024 04:36 AM

கொடைக்கானல் : கொடைக்கானலில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் சாமனியர்கள் மீது கடுமை காட்டிய அதிகாரிகள் நிரந்தர கட்டடங்கள் அகற்றுவதில் மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் நிலையில் தற்போது இதன் பணியையும் நிறுத்தி விட்டனர்.
கொடைக்கானலில் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி செப். 25 முதல் நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக ஏரிச்சாலை சந்திப்பில் இருந்து மூஞ்சிக்கல் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. வெள்ளி நீர்வீழ்ச்சியில் ரோட்டோர கடைகள் அனைத்தையும் அதிகாரிகள் அகற்றி கடுமை காட்டினர். ஏரிச்சாலை சந்திப்பு,மூஞ்சிக்கல் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றுவது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்திய நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இருவாரமாக நடக்கவில்லை.
ஏரிச்சாலை சந்திப்பிலிருந்து செண்பகனுார் இடையே நிரந்தர கட்டுமானத்துடன் வணிக ரீதியான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதில் ஏரிச்சாலை சந்திப்பிலிருந்து மூஞ்சிக்கல் வரை மட்டுமே சில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு முழுமை பெறாமல் உள்ளது. தற்காலிகமாக அமைக்கப்பட்ட ரோட்டோர கடைகளை மட்டுமே நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி சாதித்துள்ளனர். நிரந்தர கட்டுமானங்களை அகற்ற எவ்வித கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. பெயரளவிற்கு வருவாய்த்துறை அளவீடு செய்த குறியீடுகளும் மாயமாக மறைந்துள்ளன. நெடுஞ்சாலைத்துறை மட்டுமே ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை துவக்கிய நிலையில் நகராட்சி , நீர்வளத்துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தாமல் மெத்தனப் போக்கில் உள்ளனர்.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் அனைத்துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து நாள்தோறும் மேற்கொள்ளும் பணி விவரங்கள் தெரிவிக்க வேண்டும் என ஆர்.டி.ஓ., சிவராம் கடுமை காட்டிய போதும் ஏதோ அழுத்தத்தின் பின்னணியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடராமல் உள்ளது.
ஆர்.டி.ஒ., சிவராம் கூறுகையில்,'' வடகிழக்கு பருவ மழை குறித்த பேரிடர் பணி ஆயத்தம் குறித்த கூட்டங்கள் நடப்பதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கவில்லை. ஒரிரு தினங்களில் மீண்டும் துவங்கும் ''என்றார்.
நகராட்சி கிடுக்கிப்பிடி
கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள 236 கடைகளை நகராட்சி வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடுத்துள்ளது. போக்குவரத்திற்கு இடையூறாக 3 அடி முதல் 4 அடி வரை ரோடை ஆக்கிரமித்துள்ளனர். இைத தொடர்ந்து நகராட்சி கமிஷனர் சத்தியநாதன் ,ஏரிச்சாலையில் நிர்ணயிக்கப்பட்ட அளவினை மீறி ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளின் ஆக்கிரமிப்பை ஒரு வாரத்திற்குள் தானாக வியாபாரிகள் அகற்ற வேண்டும். மீறும் பட்சத்தில் கடைகள் பூட்டப்படும். ஏரிச்சாலையில் உள்ள ரோட்டோர கடைகளுக்கும் இது பொருந்தும். பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.