ADDED : மே 18, 2025 03:11 AM
வடமதுரை: குப்பாம்பட்டி பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க இரு இடங்களுக்கு அலைந்து அவதிப்பட்ட நிலை தினமலர் செய்தி எதிரொலியாக முடிவுக்கு வந்துள்ளது.
அய்யலுார் பேரூராட்சியில் கோம்பை, பஞ்சந்தாங்கி, காக்காயன்பட்டி மலைப்பகுதி கிராமங்களில் அலைபேசி சேவை குறைவு.
இதனால் இப்பகுதியின் ரேஷன் பொருள் வாங்க இயந்திர 'பயோ மெட்ரிக்' பதிவுக்கு விலக்கு தந்து பழைய முறையே உள்ளது. இந்நிலையில் குப்பாம்பட்டியில் புதிதாக திறக்கப்பட்ட நகரும் ரேஷன் கடையிலும் இயந்திர 'பயோ மெட்ரிக்' முறையில் கைரேகை பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது.
இதனால் இங்கு பொருட்கள் வாங்க வேண்டிய கார்டு தாரர்கள் முதல் நாளில் அய்யலுார் மெயின் கடைக்கு சென்று பயோ மெட்ரிக் கைரேகை பதிந்து அடுத்த நாள் குப்பாம்பட்டி கடையில் பொருட்கள் வாங்கினர். இதனால் ஒவ்வொரு மாதமும் இரு நாட்களை வீணடிக்கும் நிலை இருந்தது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து தற்போது கோம்பை பகுதியினர் போல் குப்பாம்பட்டியினருக்கும் 'பயோ மெட்ரிக்' பதிவில் விலக்கு தந்து ரசீது முறையிலே பொருள் வழங்கப்படுகிறது.