/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஏழூர் முத்தாலம்மன் கோயில் திருவிழா
/
ஏழூர் முத்தாலம்மன் கோயில் திருவிழா
ADDED : அக் 18, 2025 04:21 AM

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி, தேவரப்பன்பட்டி, சித்தரேவு, நெல்லூர் சின்னகவுண்டன்பட்டி, சின்ன அய்யம்பாளையம், பெரிய அய்யம்பாளையம் ஊர்களில் முத்தாலம்மன் கோயில் புரட்டாசி திருவிழா 3 நாட்கள் நடந்தது.
15 நாட்களுக்கு முன்பு சுவாமி சாட்டுதலும், தொடர்ந்து காப்பு கட்டுதல் நடந்தது. சுவாமி சாட்டுதல் நாளிலிருந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். இதை தொடர்ந்து முத்தாலம்மன் கோயில் திருவிழாவின் முதல் நாள் 15ம் தேதி இரவு எல்லை காவல்காரசாமி பூஜைக்குப் பின்பு சிங்க வாகனத்தில் எழுந்தருளிய முத்தாலம்மனை கோயிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி , அதன்பின்பு அம்மனுக்கு கண் திறப்பு, தங்க ஆபரண அலங்காரம் செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் அம்மனுக்கு மா விளக்கு, பொங்கல், அக்னிசட்டி எடுத்தல், கிடா வெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று முளைப்பாரி ஊர்வலம், மேளதாளம், வானவேடிக்கைகள் முழங்க சிங்க வாகனத்தில் முத்தாலம்மன் மஞ்சள் நீராடி பூஞ்சோலைக்கு சென்றடைந்தது. விழாவினை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறுதல், உறி அடித்தல், பெண்கள் பாட்டுபாடி கும்மி அடித்தல் போன்ற பாரம்பரியமான விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம் நடந்தன.