n 15 ஆண்டாகியும் புதுப்பிக்காத தார் ரோடுகள்
n மழையால் மேலும் சிதிலமடைவதால் அவதி
மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் பெரும்பாலான தார் ரோடுகள் 10,15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதாகும். சமீபகாலமாக கிராம பகுதிகளில் புதிய தார் ரோடுகள் போடுவது என்பதும், அதை காண்பது என்பதும் குதிரை கொம்பான விஷயமாகவே உள்ளது. இதனால் கிராமப்புறங்களில் 90 சதவீத தார் ரோடுகள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன. சில ரோடுகளில் தார் ரோடு என்பதற்கான அறிகுறியே இல்லாமல் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. டூவீலர் , நடந்து செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். குஜிலியம்பாறை, வேடசந்துார் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் இதுபோன்ற சேதமடைந்த ரோடுகளின் எண்ணிக்கை ஏராளம்.
தார் ரோடுகள் புதிதாக அமைப்பது என்பது அரிதான விஷயமாக உள்ள நிலையில் அதை நல்ல ஒப்பந்ததாரர்களிடம் கொடுத்து ரோட்டை அமைக்க சொன்னால் மட்டுமே நீண்ட காலத்திற்கு ரோடு பயன்பாட்டில் இருக்கும். இல்லாவிடில் ரோட்டின் நிலை அதோ கதிதான். மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் ரோடு பணிகளுக்கு 20 முதல் 30 சதவீதம் வரை கமிஷன் போவதால் ரோடுகளின் தரம் குறைந்து வருவதாக குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது. ஜனவரி வரை மட்டுமே மழைக்காலம் உள்ள நிலையில் அதன் பிறகு சேதம் அடைந்த ரோடுகளை ஊராட்சி வாரியாக கணக்கெடுத்து முறையாக புதுப்பித்து தர வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே ஒலிக்கிறது.

