ADDED : செப் 01, 2025 02:28 AM

வடமதுரை: மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடந்தது.
வடமதுரையில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிலைகள் நேற்று மாலை வடமதுரை ஆஞ்சநேயர் கோயில் அருகில் ஒருங்கிணைக்கப்பட்டு, அங்கிருந்து கடை வீதி வழியே ஊர்வலமாக நரிப்பாறை குளத்திற்கு கொண்டு சென்று கரைத்தனர்.
மாவட்ட தலைவர் நாகராஜ், மாநில இளைஞரணி செயலாளர் ஓம்கார் பிரகாஷ், ஒன்றிய தலைவர் ஐயப்பன் செயலாளர் ராஜாராம், சஷ்டி சேனா ஹிந்து மக்கள் நல இயக்க நிறுவனத் தலைவர் சரஸ்வதி பங்கேற்றனர்.
திண்டுக்கல்: இந்து மக்கள் கட்சி சத்திரியர்கள் பேரவை சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 16 விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைகளுக்கு பின் ஊர்வலமாக திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிற்கு எடுத்துவரப்பட்டன. அங்கு, நடந்த கூட்டத்தில், திரைப்பட இயக்குனர் வீரமுருகன், நடிகர் சேரன் ராஜ் கலந்துகொண்டு ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். இதில் இந்து மக்கள் கட்சி சத்திரிய பேரவை மாநிலத்தலைவர் தர்மா, மனித உரிமை கமிஷன் நாகேந்திரன், நிர்வாகிகள் ரமேஷ்பாண்டியன், ஹரி உள்பட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம், திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து துவங்கி காமராஜர் சிலை, வெள்ளை விநாயகர் கோயில், காந்தி மார்கெட் வழியாக கோட்டை குளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வேடசந்தூர்: இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் அரசு மருத்துவமனை முன்பு துவங்கி சாலைத்தெரு, கடைவீதி, பஸ் ஸ்டாண்ட், ஆத்து மேடு, தாலுகா ஆபிஸ் வழியாக குடகனாற்றில் கரைக்கப்பட்டது.
இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பால்பாண்டி முன்னிலை வகித்தார். பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பழநி: சிவசேனா, ஹிந்து மக்கள் கட்சி, ஹிந்து தமிழர் கட்சி, ஹிந்து மகா சபா சார்பில் விஜர்சன ஊர்வலம் அடிவாரம் பாலாஜி ரவுண்டானா பகுதியில் துவங்கியது. 109 விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் பங்கேற்றன. ஆண்டவன் பூங்கா ரோடு, பஸ் ஸ்டாண்ட், மயில் ரவுண்டானா, திண்டுக்கல் ரோடு, வேல் ரவுண்டானா, காந்தி மார்க்கெட் ரோடு, தெற்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள் வழியாக சென்று சண்முக நதியில் கரைக்கப்பட்டது. இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் அடிவாரம் பகுதியில் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்து ஊர்வலம் துவங்கியது.
சிவசேனா சார்பில் மயில் ரவுண்டானா பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்து தமிழர் கட்சி ராம ரவிக்குமார் தலைமை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கொடைக்கானல்: இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நாயுடுபுரம் டிப்போ பகுதியில் துவங்கி நகரில் பல்வேறு பகுதிகளை வலம் வந்து இறுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள நீர்நிலையில் கரைக்கப்பட்டது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய சிலைகளும், 58 பெரிய சிலைகளும் வலம் வந்தது. ஏராளமானோர் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்.
நத்தம்: - இந்து முன்னணி ஊர்வலத்திற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சதீஷ், செயற்குழு உறுப்பினர் செந்தில்வேலு முன்னிலை வகித்தனர். நகர தலைவர் வீரமணி வரவேற்றார்.நத்தம்- கோவில்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் தொடங்கிய இந்த விநாயகர் சிலைகள் ஊர்வலம் தர்பார் நகர், பஸ் ஸ்டாண்ட், மூன்றுலாந்தர், அவுட்டர் சாலை, வழியாக அம்மன் குளத்தில் கரைக்கபட்டது. 30-க்கும் மேற்பட்ட சிலைகள், ஊர்வலத்தில் பங்கேற்றன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.