/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஊராட்சிகளில் காலியிடங்களால் பணிகள் பாதிப்பு ; எப்போ பிறக்குமோ நல்ல காலம்
/
ஊராட்சிகளில் காலியிடங்களால் பணிகள் பாதிப்பு ; எப்போ பிறக்குமோ நல்ல காலம்
ஊராட்சிகளில் காலியிடங்களால் பணிகள் பாதிப்பு ; எப்போ பிறக்குமோ நல்ல காலம்
ஊராட்சிகளில் காலியிடங்களால் பணிகள் பாதிப்பு ; எப்போ பிறக்குமோ நல்ல காலம்
ADDED : டிச 18, 2024 06:48 AM

உள்ளாட்சி அமைப்புகளை பொருத்தவரை நகர்புறம், ஊரகம் என இரு பெரும் பிரிவுகளாக கட்டமைக்கப்பட்டுள்ளது. நகர்புறங்களை பொறுத்தவரை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அமைப்புகளில் நிதி ஆதாரம், வரி வருமான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதே போல் பணியாளர்கள் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உள்ளது. ஊரக உள்ளாட்சியை பொறுத்தவரை மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி என பிரிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் மாவட்ட ஊராட்சியை பொறுத்தவரை வழங்கப்படும் நிதியை பிரித்து திட்ட பணிகளாக ஒப்பந்தம் விடுவதுடன் பணி முடிவடைவதால் பெரியளவில் ஊழியர் கட்டமைப்பு தேவையின்றி உள்ளது. ஊராட்சி ஒன்றியங்களின் பணி என்பது ஊராட்சி நிர்வாகங்களை கண்காணித்து வேலை வாங்குவது, திட்ட பணிகளை தேர்வு செய்து டெண்டர் விட்டு ஒப்பந்தகாரர்கள் மூலம் பணிகளை செய்து சரிபார்த்து பில் தொகை வழங்குவது, பின்னர் திட்டங்களை ஊராட்சிகளிடம் ஒப்படைப்பது, சிலவற்றை தங்களே பராமரிப்பது என்பது போன்ற மேலோண்மை பணியாக உள்ளது.
இவற்றிற்கு அடுத்ததாகவும் கடைசியாகவும் இருக்கும் ஊராட்சிகளே மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டிய முக்கிய பொறுப்பில் உள்ளன. குறிப்பாக குடிநீர் சப்ளை, துாய்மை பணிகளை உறுதி செய்வது இவற்றின் முக்கிய பொறுப்பாகும். இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழ்நிலையில் முழு நிர்வாக பொறுப்பும் அந்த ஊராட்சியின் செயலாளரை சேரும். 2016 அக்டோபர் முதல் 2020 ஜனவரி வரை மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நேரத்தில் பி.டி.ஓ.,க்கள் ,ஊராட்சி செயலாளர்கள் மூலமே நிர்வாக பொறுப்பை கவனித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 40க்கு அதிகமான ஊராட்சிகளில் செயலாளர் பணியிடம் காலியாக உள்ளது.
இதனால் அருகில் இருக்கும் ஊராட்சியை சேர்ந்த செயலாளர்களே கூடுதல் பொறுப்பாக சேர்த்து கவனிக்கும் நிலை உள்ளது. இதுதவிர பணி ஓய்வு, இறப்பு போன்ற காரணங்களால் காலியான மேல்நிலை நீர்தொட்டி இயக்குபவர்கள் பணியிடங்கள் 20 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படுவதால் மேல்நிலை தொட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்தும் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. துாய்மை பணியாளர் காலி பணியிடங்களும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது.
ஊராட்சிகளில் தினக்கூலி அடிப்படையில் பணியாட்களை நியமித்து பணிகளை செய்யும் நிலை உள்ளது.
பணியில் ஏதாவது சிக்கல், அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கான தீர்வு காண்பதும் சவாலான விஷயமாக மாறிவிடுகிறது. எனவே காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.