ADDED : மார் 11, 2024 06:38 AM
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் குறைகேட்பு முகாம் நடத்திய அமைச்சர் ஐ.பெரியசாமி அருந்ததியர் காலனியில் இலவச வீடுகள் கட்டித் தருவதாக உறுதியளித்தார்.பேரூராட்சிக்குட்பட்ட 4வது வார்டு ஆதிதிராவிடர் காலனியில் அமைச்சர் ஐ.பெரியசாமி, நேற்று குறை கேட்பதற்காக வந்தார். பலர் தங்களுக்கென வசிப்பிடம் இல்லாததை வலியுறுத்தி, கோரிக்கை வைத்தனர். அப்போது அமைச்சர் பேசுகையில்,14 ஆண்டுகளுக்கு முன், தி.மு.க., ஆட்சியின் போது அருந்ததியர் காலனி அருகே இடம் விலைக்கு வாங்கி மக்களுக்கான வீடுகள் கட்டித் தர ஏற்பாடு நடந்தது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும், எம்.எல்.ஏ., நிதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. இப்பகுதியினருக்கு, அரசு வீடு வழங்கும் திட்டம் மூலம் நிம்மதியாக வசிக்கும் வகையில் பாதுகாப்பான வீடுகள் கட்டித் தர ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
தி.மு.க., ஆத்துார் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், அம்பாத்துறை நிர்வாகி ரவி, ஆத்துார் ஊராட்சி ஒன்றிய தலைவர் மகேஸ்வரி முருகேசன், பேரூராட்சி தலைவர் பிரதீபா, துணைத் தலைவர் ஆனந்தி பங்கேற்றனர்.

