UPDATED : செப் 29, 2026 08:33 PM
ADDED : செப் 29, 2026 08:01 PM
திண்டுக்கல்:'நெஞ்சு கனமாக இருக்கு' என்றதும் 'சுக்கு காபி குடிச்சா சரியாகிடும்' என முடிவு செய்வது ஆபத்து. இதயம் வாட்ஸ்அப் குழுவின் ஆலோசனைக்கும், மற்றவரின் முடிவுக்கும் காத்திருக்காது. எல்லா நெஞ்சுவலியும் மாரடைப்பு அல்ல.
நெஞ்சில் அழுத்தம், கை, தாடை வலி, மூச்சுத்திணறல், குளிர் வியர்வை, குமட்டல் மாரடைப்பின் எச்சரிக்கையாக இருக்கலாம். மாரடைப்பு சந்தேகம் இருந்தால் 108-ஐ அழைத்து அவசர மருத்துவக் குழுவின் வழிகாட்டுதலை பின்பற்றுங்கள்.யாரேனும் திடீரென கீழே விழுந்து பதிலளிக்காமல், இயல்பாகச் சுவாசிக்காமல், மூச்சுவிட திணறுகிறார் என்றால் இதய நிறுத்தமாக இருக்கலாம். அந்த சமயத்தில் மார்பின் நடுவில் நிமிடத்திற்கு 100- - 120 முறை வலுவாகவும், வேகமாகவும் அழுத்தும் சி.பி.ஆர்., உதவி செய்ய வேண்டும்.
இந்த சி.பி.ஆர்., முறையை கிராமத்தினரும் பயிற்சி பெறுவது தக்க சமயத்தில் உயிர் காக்க உதவும்.பயண நேரம், சிகிச்சை வசதிகள் மருத்துவமனைத் தேர்வில் மிக முக்கியம். மாரடைப்பு சந்தேகத்தில் முதல் மருத்துவத் தொடர்பில் இருந்து 10 நிமிடங்களுக்குள் இ.சி.ஜி., மதிப்பீடு முக்கிய இலக்கு. பயிற்சி பெற்ற உள்ளூர் குழு ஆரம்ப சிகிச்சை, நிபுணருடன் தொடர்பு, கண்காணிப்புடன் பாதுகாப்பான மாற்றம் ஆகியவை ஒன்றிணைய வேண்டும். அதோடு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவோம்.
- டாக்டர் ஹரிஷ் அழகுராஜ், நிலக்கோட்டை.
