பழனி மடம் நிலத்திற்கான ஆவணங்களுடன் வாரிசுகள் ஆஜர்
பழனி மடம் நிலத்திற்கான ஆவணங்களுடன் வாரிசுகள் ஆஜர்
ADDED : ஜூலை 29, 2026 02:42 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி மடம் நில மோசடி வழக்கில், சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு, 1880ல் நிலத்தை மடத்துக்கு எழுதிக்கொடுத்தவரின் வாரிசுதாரர்கள், அசல் ஆவணங்களுடன் நேற்று ஆஜராகினர்.
பழனி அடிவாரம், பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான நிலம், போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.
கடந்த 1880ல் அந்த நிலத்தை, மடத்திற்கு தானமாக கொடுத்த குப்புசாமி மணியக்காரர் குடும்பத்தின் வாரிசுதாரர்களான, பழனி பாலசமுத்திரத்தை சேர்ந்த சுந்தரி, ஜெயலக் ஷ்மி, விஷ்ணுசுதர்சன் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
நிலத்துக்கான அசல் ஆவணங்கள், தங்கள் வழக்கறிஞர்களுடன் நேற்று மாலை, திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் அவர்கள் ஆஜராகினர்.
எஸ்.பி., சஜிதா, டி.எஸ்.பி., அஜய்தங்கம், அவர்களிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தி, சாட்சியங்கள், ஆவணங்களை பதிவு செய்தனர்.
வாரிசுதாரர்கள் தரப்பில் பார் கவுன்சில் துணைத்தலைவர் கார்த்திகேயன், வழக்கறிஞர் கண்ணகி ஆகியோர் கூறியதாவது:
அந்த நிலம் 1882ல் தர்ம சாஸ்திரத்துக்காக குப்புசாமி மணியக்காரர் என்பவரால் தண்டபாணி மடம் என்ற தனியாருக்கு, பராமரிப்புக்கு எழுதி கொடுக்கப்பட்டது. அதற்கான அசல் ஆவணங்கள் எங்களிடம் உள்ளன.
கட்டடமாக மடம் இயங்கி பராமரிப்பு செய்யும் போது, தர்மசாஸ்திரம் செல்லுபடியாகும். அங்கு மடமே இல்லை என்றால் என்ன நோக்கத்திற்காக நிலம் கொடுக்கப்பட்டதோ அது நிறைவேறு வதில்லை. எனவே உரிமையாளருக்கே நிலம் திரும்ப சென்றுவிடும் என, சார்பு நீதிமன்றத்தில் நடந்த சிவில் வழக்கில் தீர்ப்பாகி உள்ளது.
அதன்படி, நிலத்துக்கும், ஹிந்து சமய அறநிலைய துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகிறது.
நிலத்தை திரும்ப பெற்று, உரிமை கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கில்லை. முப்பாட்டனாரின் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அடுத்த கட்டமாக நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்ல உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த வழக்கு தொடர்பாக, இதுவரை 82 பேரிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து, சாட்சியங்களை சேகரித்துள்ளனர்.
