UPDATED : அக் 19, 2026 04:35 PM
ADDED : அக் 19, 2026 04:32 PM
செம்பட்டி:
புரட்டாசி மாத நிறைவை தொடர்ந்து, 2 நாட்களாக கிராமப்புற இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. கூடுதல் விலையில் விற்பனை தாராளமாக நடந்தது.
வார இறுதி நாட்கள் மட்டுமின்றி விசேஷ நாட்களிலும், அசைவ பிரியர்களின் சிறப்பு உணவுகளை நாடிச் செல்வோர் அதிகம். புரட்டாசி மாத நிறைவு, பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சின்னாளபட்டி, செம்பட்டி, கன்னிவாடி பகுதிகளில், வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதியது. இதற்காக, நேற்று முன்தினம் முதல் இறைச்சி விற்பனையாளர்கள் ஆயத்தமாகி விட்டனர். நள்ளிரவில் துவங்கி, நேற்று வரை பரவலாக விற்பனை மும்முரமாக நடந்தது. வெள்ளாடு, செம்மறி உள்ளிட்ட இறைச்சி வகைகளுக்கான தேவை அதிகரித்த சூழலில், சில விற்பனையாளர்கள் கிலோவிற்கு 100 ரூபாய் வரை விலை அதிகரித்து விற்பனை செய்தனர்.
இறைச்சி, கோழி, மீன், காடை, வான்கோழி என, அனைத்து வகையான அசைவ தயாரிப்புகளுக்காகவும், குக்கிராம கடைகளிலும் அதிக தேவை நிலவியது. ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்த நிலையில், பலர் அருகாமையில் உள்ள நகர் பகுதிகளுக்கு படையெடுக்கும் நிலையும் ஏற்பட்டது.
