/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் இடைவிடாது மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; அணைகள் அனைத்தும் நிரம்பின; நீரில் மூழ்கிய விவசாய பயிர்கள்
/
திண்டுக்கல்லில் இடைவிடாது மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; அணைகள் அனைத்தும் நிரம்பின; நீரில் மூழ்கிய விவசாய பயிர்கள்
திண்டுக்கல்லில் இடைவிடாது மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; அணைகள் அனைத்தும் நிரம்பின; நீரில் மூழ்கிய விவசாய பயிர்கள்
திண்டுக்கல்லில் இடைவிடாது மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; அணைகள் அனைத்தும் நிரம்பின; நீரில் மூழ்கிய விவசாய பயிர்கள்
UPDATED : டிச 14, 2024 07:23 AM
ADDED : டிச 14, 2024 06:45 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் இடை விடாது பெய்த மழையால் அணைகள் அனைத்தும் நிரம்பிய நிலையில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீரில் விவசாய பயிர்கள் மூழ்கிய நிலையில் ரோடுகளில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று மாலை வரை மழை நீடித்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மழையுடன் பனியும் சேர்ந்து கொண்டதால் புறநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே சென்றனர்.திண்டுக்கல் மதுரை சர்வீஸ் ரோடு பகுதி முழுவதும் மழைநீர் தேங்கியதால் காலை முதல் அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கலெக்டர் ஆபிஸ் ரோடு,அஞ்சலி ரவுண்டானா,திருச்சி ரோடு,பழநி ரோடு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதியடைந்தனர். பி.வி.தாஸ் காலனி மாநகராட்சி சுகாதார வளாக குடியிருப்பு பகுதியில் 15க்கு மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் பாதித்தனர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 859 மி.மீ.,மழை பதிவாகி உள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பிய நிலையில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
திண்டுக்கல் அருகே சிறுமலை பகுதியில் பெய்த கனமழையால் 18வது கொண்டை ஊசி வளவில் 15 ஆண்டு பழமையான மரம் ரோட்டில் சரிந்தது. அங்குள்ள ஊராட்சி பணியாளர்கள்,பொதுமக்கள் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதித்தது. சிறுமலை புதுார் பகுதியில் வெள்ளிமலை 55, வீடு இடிந்தது. சுதாரித்த அவரது குடும்பத்தினர் விபத்திலிருந்து தப்பினர்.
ஆத்துார் : மேற்கு தொடர்ச்சிமலையை நீர்பிடிப்பாக கொண்டு ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி, சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள், 30க்கு மேற்பட்ட கிராம கூட்டு குடிநீர் திட்டங்கள் இப்பகுதியில் இருந்து செயல்படுத்தப்படுகிறது.
2022ல் 4 முறை , 2023ல் ஒருமுறை மட்டுமே நிரம்பிய நீர் தேக்கம் இந்தாண்டு ஏற்கனவே 4 முறை நிரம்பிய சூழலில் இரு நாட்களாக மழையால் நீர் வரத்து அதிகரிக்க நேற்று 5வதுமுறையாக நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதை நம்பி உள்ள கருங்குளம், நடுக்குளம், புல்வெட்டி கண்மாய் உள்ளிட்ட பாசன கண்மாய்களும் நிரம்பி மறுகால் பாய்கின்றன.
வேடசந்துார் : அழகாபுரி குடகனாறு அணை (27) நிரம்பிய நிலையில் அணைக்கு வினாடிக்கு1707 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர், திறந்து விடப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து ஆற்றோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பழநி: பழநி பகுதியில் பாலாறு பொருந்தலாறு, வரதமாநதி அணை, குதிரையாறு அணை தொடர் மழையால் நிரம்பிய நிலையில் நேற்று பெய்த மழையால் நீர் வரத்து அதிகரிக்க ஆற்றில் வரத்து நீர் திறந்து விடப்பட்டதால் குதிரையாறு, சண்முக நதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதை உடுமலை-பழநி சாலையில் உள்ள சண்முக நதிப் பாலத்தில் பொதுமக்கள் திரளாக நின்று வேடிக்கை பார்த்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. நதிக்கரையில் உள்ள கிராமங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டு ஆபத்தான பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பெரும்பாலான குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தது.
பழநி மடத்துக்குளம் சாலையில் அக்ரஹாரம் பகுதி அருகே மரம் விழுந்தது. இதனை பழநி தீயணைப்புத் துறையினர் அப்புறப்படுத்தினர். நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்த மரம் வேரோடு சாய்ந்தது. ஆயக்குடி பகுதியில் 16 வது வார்டில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் சிலர் வீடுகளை காலி செய்தனர்.
புது ஆயக்குடி பகுதியில் தண்டபாணி வீடு மழையால் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தது. கோம்பைப்பட்டி கிராமத்தில் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் சேதமடைந்தன. இங்குள்ள பெரிய துறையான் ஓடை உடைந்ததால் நீர் வெளியேறி சேதம் அதிகரித்தது. பழநி அடிவாரம் பகுதியில் வையாபுரி குளத்திற்கு இடும்பன் குளத்திலிருந்து வரும் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் நீர் புகுந்தது. இதனால் நடவு செய்யப்பட்டுள்ள நெல் பயிர்கள் சேதமடைந்தன. கோதைமங்கலம், பாப்பான்குளம் பகுதியில் வாய்க்காலில் ஆக்கிரமிப்பு இருந்ததால் தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. மழையால் 2000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
நெய்க்காரப்பட்டி : பழநி பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகள் நிரம்பி உபரி நீர் ஆறுகளில் திறந்து விடப்படுகிறது. நேற்று வினாடிக்கு 2000 கன அடிக்கு மேல் குதிரையாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் குதிரையாறுஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதில் பூஞ்சோலை கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் பூஞ்சோலை கிராமம் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது கிராம மக்கள் குதிரைஆறு அணையின் மேல் உள்ள பாதை வழியே 7 கிலோமீட்டர் துாரம் சுற்றி செல்கின்றனர். மேலும் அருகில் உள்ள கிராமங்களை இணைக்கும் நரிப்பாறை பகுதிக்கு அருகே உள்ள தரைப்பாலமும் சேதமடைந்தது.
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள பகுதிகளில் மழையால் பரப்பலாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. 88 வரை தண்ணீர் நிரம்பியதால் வினாடிக்கு 1900 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் நீரால் பல மாதங்களாக நீரின்றி வறண்டு கிடந்த குளங்களுக்கு செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வடமதுரை: ஒட்டன்சத்திரம், திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலைகள் குறுக்கிடும் நால்ரோடு சந்திப்பு பகுதியில் நீர் பெருமளவில் தேங்கி நின்றது. ஒரு பக்க ரோடு முழுவதும் நீரால் மூழ்கின. இதனால் வாகனங்கள் மெதுவாக கடந்துசென்றன. வணிக நிறுவனங்கள் திறக்கப்படாமல் மூடி கிடந்தன.
அய்யலுார் பொட்டிநாயக்கன்பட்டி ரயில்வே சுரங்கப்பாதையில் 4 அடி உயரத்திற்கும் மேல் நீர் நிரம்பியது. இக்கிராமத்தில் அய்யாவு வயது முதிர்வு காரணமாக இறந்தநிலையில் அஞ்சலி செலுத்த வந்தவர்கள் அனைவரும் தங்களது வாகனங்கள் ரோட்டிலே நிறுத்திவிட்டு ஆபத்தான முறையில் தண்டவாளங்களை கடந்து சென்றனர். இறுதி ஊர்வலமும் தேங்கிய நீரின் வழியே சிரமத்துடன் மயானத்திற்கு சென்றது. சுரங்கப்பாதையை பயன்படுத்தும் கிணத்துபட்டி, வால்பட்டி, கருஞ்சின்னானுார், செங்களத்துபட்டி என பல கிராம மக்கள் பாலத்தோட்டம் வழியே சுற்றுப்பாதையில் சென்றனர்.
ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் பழனி அகல ரயில் பாதையில் விருப்பாச்சி சாமியார் புதுார் இடையே ரயில்வே சப்வே உள்ளது. இந்த சப்வேயை விவசாயிகள், பள்ளி மாணவிகள் ,பொதுமக்கள் உட்பட பலரும் பயன் படுத்தி வருகின்றனர். இரு நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் ரயில்வே சப்வே மூழ்கியது. இதனால் இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் அவதிக்கு ஆளாகின்றனர்.
ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் கனமழை காரணமாக ஒட்டன்சத்திரத்தில் இருந்து பாச்சலுார் செல்லும் மலை ரோட்டின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
இந்த ரோடு வழியாக அரசு பஸ்கள், சுற்றுலா வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக செயல்பட்டு மண் அள்ளும் இயந்திரம் சரி செய்தனர். இதனால் வாகன போக்குவரத்து தடையின்றி நடந்தது.