/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோயில் விழாவை தடுக்கும் தனிநபர்கள்
/
கோயில் விழாவை தடுக்கும் தனிநபர்கள்
ADDED : மே 13, 2025 05:52 AM
திண்டுக்கல், : புறவி எடுப்பு விழாவினை தடுக்கும் தனிநபர்கள், சிறப்பு வகுப்பு நடத்துவதை தடுத்திடுக என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக குறைதீர் கூட்டத்தில் பலரும் முறையிட்டனர்.
கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 196 மனுக்கள் பெறப்பட்டன. பிளஸ் 2 தேர்வில் 600க்கு 550க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற துாய்மைக்காவலர்களின் குழந்தைகளான ஜிவஜோதி, மணி, மாற்றுத்திறனாளி பார்வையற்றோர் பிரிவில் 535 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவன் சிவரஞ்சன் ஆகியோரை கலெக்டர் பாராட்டினார்.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகேஸ்வரி கலந்துகொண்டனர்.
நத்தம் வேலாயுதம்பட்டி ஊர் முக்கியஸ்தர்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், எங்கள் பகுதி காளியம்மன், அய்யனார், வண்டியார் சுவாமிகளுக்கு புறவி எடுப்பு உற்ஸவ விழாவை தனிநபர்கள் தடுக்கும் விதமாக செயல்படுகின்றனர்.
போலீசாரையே மிரட்டுகின்றனர். உரிய பாதுகாப்பு வழங்கி விழா நடத்திட வேண்டுமென குறிப்பிட்டிருந்தனர்.
இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் நிரூபன், செயலர் தீபக்ராஜ் தலைமையில் அளித்த மனுவில், சில பள்ளிகள் கோடை விடுமுறையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.
கல்வி அதிகாரிகளும் அலட்சியப்போக்கோடு நடந்து கொள்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது.
ஹிந்து மக்கள் கட்சி மாநில தொண்டரணி தலைவர் மோகன் அளித்த மனுவில், திண்டுக்கல்லில் கிறிஸ்தவ வன்னியர்களை எம்.பி.சி., பட்டியில் சேர்க்கக்கோரி நடக்க உள்ள மாநாட்டினை தடை செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.