/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பண்டிகை காலங்களில் பணி செய்வது மகிழ்ச்சியே
/
பண்டிகை காலங்களில் பணி செய்வது மகிழ்ச்சியே
ADDED : அக் 21, 2025 03:58 AM

மக்கள் நலனை பாதுகாப்பதே எங்களின் பொறுப்பு செந்தில்குமரன், உறைவிட மருத்துவர், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, திண்டுக்கல்: மக்களை சாதாரணமாக கடந்துவிட முடியாத துறை இது. விபத்து, காயம், உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் என ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் நோயாளிகளுக்கு மருத்துவக்கண்காணிப்பு தேவைப்படும் என்பதால் பண்டிகை நாளென்று விடுமுறை எடுக்க முடியாது.
தீபாவளி பண்டிகையையொட்டி, தீக்காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 20படுக்கைகள் கொண்ட தனிவார்டு தயார் நிலையில் உள்ளது. மகப்பேறு வார்டில் 2 மருத்துவர்கள், நர்சுகள், லேப் டெக்னீசியன், சுகாதார பணியாளர்கள் என அனைத்து வார்டுகளிலும், மருத்துவப்பணியாளர்கள் மாற்றுப்பணியில் சுழற்சி முறையில் பணியாற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான பண்டிகை கொண்டாட்டம் முக்கியம் என்பதுபோல, மக்கள் நலனை பாதுகாப்பதே எங்களின் பொறுப்பு.
உயிர் காக்கும் பணி மணிகண்டன், 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர்: விபத்தோ, அவசர உதவியோ தகவல் கிடைத்த 7 நிமிடத்திற்குள் கிளம்பிச்சென்று முதலுதவி செய்ய வேண்டிய கடமை 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு இருக்கிறது. நோயாளிக்கும், மருத்துவமனைக்கும் இணைப்பு பாலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. பணிக்கு சேரும்போதே, இதுமாதிரியான சூழ்நிலைகளை எதிர்கொள்ள முழு அளவில் பணியாளர்கள் தயாராக இருப்பர். ஆகவே இந்த வேலையில் சிரமம் என்பதற்கு இடமில்லை. உயிர் காக்கும் பணியில் சுகாதாரத்துறையோடு ஒருங்கிணைந்து செயல்படுதே மகிழ்ச்சி.
பணி செய்வது மகிழ்ச்சியே தனபால், அரசு பஸ் டிரைவர்: 'தீபாவளி, பொங்கல் நாட்களில் பணி செய்வது கடினமானதுதான். ஆனால், அரசு பஸ்ஸை நம்பிய மக்களின் சந்தோசத்துக்காக டிரைவர் சீட்டில் உட்கார்ந்து இருக்கிறோம் என்பதில் மன நிறைவு கிடைக்கிறது. குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாதது வருத்தமென்றாலும், பொதுப்போக்குவரத்தை நம்பிய ஒவ்வொருவரும் அவரவர் குடும்பத்தை சந்திக்கும் நாளுக்காக பணி செய்கிறோம் என நினைக்கையில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. மாற்றுப்பணிக்கு ஆள் இல்லாவிட்டாலும் கூட இந்த மாதிரி சூழ்நிலைகளில் மறுப்புசொல்லாமல் பணி செய்ய போக்குவரத்து ஊழியர்கள் சலைப்பதில்லை.
சுழற்சி முறையில் பணி கார்த்திக், டி.எஸ்.பி., திண்டுக்கல் நகர்: 'தீபாவளி பண்டிகைக்காக சப் டிவிசன் முழுவதும் போலீஸ் ரோந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வழக்கமான பேட்ரோல்கள், வாகன சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகர் பகுதியில் மட்டும் 250 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குற்றச்சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்கள், கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரவுப்பணி போலீசாருக்கு ஒய்வு வழங்கப்பட்டு, குடும்பத்தினரோடு நேரம் செலவிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவுப்பணிக்கு சுழற்சி முறையில் உள்ள அனைத்து போலீசாரும் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
பணியாற்றுவதில் மகிழ்ச்சியே விவேகானந்தன், மாவட்ட தீயணைப்பு அலுவலர், திண்டுக்கல் : தீபாவளி நேரங்களில் சில நேரங்களில் எதிர்பாராத விபத்துக்கள் நடப்பதுண்டு. அது மாதிரியான சமயங்களில் வாகனங்களில் எளிதாக சம்பவ இடத்தை நெருங்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம். பண்டிகை காலங்களில் பணிபுரிவது சிரமமாக இருந்தாலும் பொதுமக்களின் நலன் கருதி பணியாற்றுவதில் மனமகிழ்ச்சியே. அனைத்து தீயணைப்பு நிலையங்களில் ஊழியர்கள் தயார் நிலையில் இருந்தாலும், குடும்பத்துடன் நேரம் செலவிடும் வகையில் சுழற்சி முறையில் பணி கொடுக்கப்பட்டுள்ளது.