ADDED : பிப் 07, 2025 04:47 AM
திண்டுக்கல், : கிருத்திகை நாளான நேற்று திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள வள்ளி-தெய்வானை, சண்முகர் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி காலையில் பால், இளநீர், சந்தனம் உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
திண்டுக்கல் ஆர்.வி.நகர் கந்தகோட்டம் முருகன் கோயில், என்.ஜி.ஓ. காலனி முருகன் கோயில், ஒய்.எம்.ஆர்., பட்டி முருகன் கோயில் உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ரெட்டியார்சத்திரம்: தை கிருத்திகையை முன்னிட்டு ஸ்ரீராமபுரம் அருகே ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பாலாபிஷேகத்துடன் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மகா தீபாராதனை, அன்னதானமும் நடந்தது.
தருமத்துப்பட்டி அருகே காரமடை ராமலிங்க சுவாமி கோயில், திருவாசக முற்றோதல், தேவார பாராயணத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் கார்த்திகை சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.

