UPDATED : அக் 25, 2026 06:47 PM
ADDED : அக் 25, 2026 06:44 PM
சாணார்பட்டி:
-சாணார்பட்டி அருகே சிலுவத்துாரில் பாப்பாத்தி அம்மன், சந்தன கருப்பசாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, கோபுர தீர்த்த நீர் அபிஷேக தரிசனம் பெற்றுச் சென்றனர்.
இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அக்.,24 மாலை ராமேஸ்வரம், திருச்செந்துார், அழகர் கோவில் மலை, திருமலைக்கேணி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தக் கலசங்கள், முளைப்பாரி அழைப்பு நடந்தது. தொடர்ந்து மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளும், அனுக்ஞை உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகள் நடந்தன. நேற்று 2ம் கால யாகசாலை பூஜை, மூலமந்திர கோம பூஜைகளைத் தொடர்ந்து மேளதாளம் முழங்க தீர்த்த குடங்கள் கோயில் கோபுர உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
