UPDATED : நவ 05, 2026 12:02 AM
ADDED : நவ 05, 2026 12:00 AM

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே கூலித்தொழிலாளி கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பழநி ஆயக்குடி அருகே எரமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பழனியப்பன் 55. இவரது பக்கத்து வீட்டில் வசித்தவர் கதிர்வேல் 60. வீட்டின் அருகே கழிவுநீர் ஓடியது தொடர்பாக 2021 மே 24ல் இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கதிர்வேல் கீழே தள்ளிவிட்டதில் பழனியப்பன் இறந்தார். ஆயக்குடி போலீசார் கொலை வழக்குப் பதிந்து கதிர்வேலை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை பழநி கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி மலர்விழி, குற்றவாளி கதிர்வேலுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து கதிர்வேல் சிறையில் அடைக்கப்பட்டார்.
