/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மணியகாரன்குளம் மதகு கட்டமைப்பு குளறுபடியால் வீணாகும் நீர்
/
மணியகாரன்குளம் மதகு கட்டமைப்பு குளறுபடியால் வீணாகும் நீர்
மணியகாரன்குளம் மதகு கட்டமைப்பு குளறுபடியால் வீணாகும் நீர்
மணியகாரன்குளம் மதகு கட்டமைப்பு குளறுபடியால் வீணாகும் நீர்
ADDED : அக் 19, 2024 05:18 AM

வடமதுரை : அய்யலுார் மணியகாரன்பட்டி மணியகாரன் குளத்தின் மறுகால் மதகு கட்டமைப்பு பணி குளறுபடியால் அதிகளவு நீர் தேங்காமல் வெளியேறி செல்வதால் விவசாயிகள் பாதிக்கின்றனர்.
பல்வேறு காலங்களில் நமது முன்னோர் கடும் பஞ்சங்களை சந்தித்ததையடுத்து மழை நீர் சேகரிப்பு அவசியம் என்பதை உணர்ந்து ஆங்காங்கே ஊருணிகள், குளங்கள், கண்மாய்கள், ஏரிகளை உருவாக்கினர். 2003, 2017ல் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட அனைத்து கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அரசு கட்டாயமாக்கியது . தற்போது அரசு நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் பல்வேறு நீர்நிலைகள் நீர் வரத்து வாய்ப்பை இழந்து வருகின்றன. இதில் சிறிது மாறுபட்டதாக அய்யலுார் மணியகாரன்பட்டி மணியகாரன் குளத்தில் பராமரிப்பு பணி நடந்தும் நீர் தேங்காமல் வெளியேறி செல்கிறது .
தண்ணீர் கரடு மலை பகுதியில் உருவாகும் ஓடை நீரும், மணியகாரன்பட்டி தெருக்கள், விளை நிலங்களில் சேகரமாகும் மழை நீரின் ஒரு பகுதி இங்கு வந்து சேர்கிறது. இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரவும் உதவுகிறது. இங்கு சமீபத்தில் நடந்த சீரமைப்பு பணியில் கரை பகுதி பலமாக்கப்பட்டது. ஆனால் மறுகால் மதகு கட்டமைப்பிற்கு பதிலாக குறைந்த உயரத்தில் ஒரு குழாய் மட்டும் பொறுத்தப்பட்டுள்ளது. இதனால் சமீபத்தில் இக்குளத்திற்கு வந்த நீரில் சிறு பகுதி மட்டுமே தங்கியது மற்றவை வெளியேறியது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
செவி சாய்க்காத அதிகாரிகள்
பி.சின்னச்சாமி, விவசாயி : தண்ணீர் கரடு பகுதியில் கன மழை பெய்தால் மட்டும் மணியகாரன் குளத்திற்கு கணிசமாக நீர் கிடைக்கும். இதுதவிர ஊர் பகுதியிலும், மேல் பகுதி விளை நிலங்களில் சேகரமாகும் மழை நீரில் ஒரு பகுதி இக்குளத்திற்கு வரும். இப்படி நீர் வரத்து வாய்ப்பு குறைவான குளத்தில் எப்போதாவது கிடைக்கும் நீர் தேங்கி நிற்காதபடி குளத்தின் மறுகால் பகுதியை தாழ்வான மட்டத்தில் பதித்து நீர் அனைத்தும் வெளியேற செய்துள்ளனர். தாழ்வான உயரத்தில் மதகு குழாய் அமைத்த போதே விவசாயிகள் சுட்டிக்காட்டியும் அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை.
-நோக்கம் புரியவில்லை
பி.தங்கவேல், சமூக ஆர்வலர் : சமீபத்தில் பேரூராட்சி மூலம் ஏறத்தாழ ரூ. அரை கோடி செலவில் குளத்தை துார் வாரி கரைகளை பலப்படுத்தி சுற்றிலும் கம்பி வேலியிட்டுள்ளனர். ஆனால் குளத்திற்கு வரும் நீரில் சொற்ப அளவு மட்டுமே தேங்கும் வகையில் மதகு கட்டமைப்பை வைத்ததால் தற்போதைய மழையில் குளத்திற்கு வந்த நீர் அப்படியே வெளியேறி சென்றது விவசாயிகளுக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. பல லட்ச ரூபாய் செலவிட்டு கரைகளை பலப்படுத்தியதன் நோக்கம் என்னவென்றே புரியவில்லை. குளத்திற்கான நீர் வரத்து வாய்க்கால் பாதையில் சில இடங்களில் கரை பலமிழந்து நீர் கணிசமாக வெளியேறும் நிலை உள்ளது. இதையும் தடுக்க சில இடங்களில் தடுப்புச்சுவர் அமைக்க அரசு கவனம் செலுத்த வேண்டும்.

