/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மரக்கன்றுகள் மூலம் பசுமையாகும் நாகம்பட்டி
/
மரக்கன்றுகள் மூலம் பசுமையாகும் நாகம்பட்டி
ADDED : அக் 21, 2024 05:33 AM

ரோட்டோரங்கள்,பொது இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து தங்கள் சுற்றுவட்டார பகுதிகளை பசுமையாக மாற்றுகின்றனர் நாகம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர்.நாகம்பட்டி ஊராட்சியில் நாகம்பட்டி, கொன்னாம்பட்டி, தம்மனம்பட்டி, ஒட்டநாகம்பட்டி, சேணன்கோட்டை, பெருமாள்கவுண்டன்பட்டி உள்ளிட்ட 21 குக்கிராமங்கள் உள்ளன.
இந்த ஊராட்சியில் உள்ள கொன்னாம்பட்டி - ஒட்டனநாகம்பட்டி ரோடு, நாகம்பட்டி - பெரியகுளம் ரோடு, தம்மனம்பட்டி ரோடு உள்ளிட்ட பல்வேறு ரோடுகளிலும் பசுமையை அதிகரிக்க மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் ரோட்டில் 3 ஆண்டுகளுக்கு முன் அடர் குருவனம் உருவாக்கப்பட்டு 5 ஆயிரம் மரக்கன்றுகள் ஒரே இடத்தில் நடவு செய்யப்பட்டு தண்ணீர் ஊற்றி பராமரிக்கின்றனர்.
நாகம்பட்டியில் பொதுமக்களின் குடிநீர் வசதி கருதி ரூ.5 காசு கொடுத்து ஒரு குடம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து பொதுமக்கள் தண்ணீர் பிடிக்கின்றனர். இதிலிருந்து வெளியேறும் கழிவு நீரைக் கொண்டு அந்தப் பகுதியில் 30 தென்னை மரங்களை நடவு செய்து அதையும் பராமரிக்கின்றனர். இதனால் நாகம்பட்டி ஊராட்சி பசுமை நிறைந்த ஊராட்சியாக மாறியுள்ளது.
மரம் நடுவது நோக்கம்
எஸ்.தங்கவேல், முன்னாள் ஊராட்சி தலைவர், நாகம்பட்டி: நாகம்பட்டி ஊராட்சியை பசுமை நிறைந்த ஊராட்சியாக மாற்ற வேண்டும் என்பது எங்களது நோக்கம். நான் தலைவராக இருந்த போது தான் கொன்னாம்பட்டி,ஒட்டனாகம்பட்டி, நாகம்பட்டி - பெரியகுளம், தம்மனம்பட்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரித்ததால் நிழல் தரும் மரங்களாக வளர்ந்துள்ளன.
பறவைகளுக்கு பழங்கள் உணவாகும்
டி.ராஜம்மாள்,தலைவர், நாகம்பட்டி: மாவட்ட நிர்வாகம் அடர் குருவனம் அமைக்க அனுமதி வழங்கியது. சேனன்கோட்டை ரோட்டில் அடர் குறுவனம் அமைத்து மா, கொய்யா, சீதாப்பழம், மாதுளை உள்ளிட்ட 5 ஆயிரம் மரக்கன்றுகளை வளர்த்து, பறவைகளுக்காக பழம் தரும் பூங்காவனத்தை உருவாக்கியுள்ளோம். பறவைகள் அங்கேயே கூடு கட்டி தங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி நாகம்பட்டி பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டியில் கழிவுநீர் வெளியேறும் இடத்தில் 30 தென்னை மரக்கன்றுகள் நட்டு மரங்களாக வளர்ந்துள்ளன.

