/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரூ.60.50 லட்சம் வரி கட்ட கூலி பெண்ணுக்கு நோட்டீஸ்
/
ரூ.60.50 லட்சம் வரி கட்ட கூலி பெண்ணுக்கு நோட்டீஸ்
ரூ.60.50 லட்சம் வரி கட்ட கூலி பெண்ணுக்கு நோட்டீஸ்
ரூ.60.50 லட்சம் வரி கட்ட கூலி பெண்ணுக்கு நோட்டீஸ்
ADDED : அக் 30, 2025 03:03 AM

திண்டுக்கல்: போலி முகவரியில் நிறுவனம் துவங்கி ரூ. கோடிக்கணக்கில் பழைய இரும்பு பொருட்களை வணிகம் செய்தவர்கள், அரசுக்கு வரி செலுத்தாததால் ரூ. 60.50 லட்சம் வரி கட்ட தினக்கூலி பெண்ணிற்கு வணிக வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுகுறித்த விசாரணையில் பெண்ணின் ஆதார், பான்கார்டை மோசடி கும்பல் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் தோப்புத்தெருவை சேர்ந்தவர் கட்டட கூலித்தொழிலாளி உதயராஜ் 26. இவரின் மனைவி சுகன்யா 25. இவரது வீட்டு முகவரிக்கு அக்.,7ல் திண்டுக்கல் வணிகவரித்துறை அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் வந்தது. அதில், திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் சங்கனம்பட்டியில் எஸ்.ஜி., டிரேடர்ஸ் பெயரில் செயல்பட்டு வரும் உங்களுக்கு சொந்தமான நிறுவனத்தின் மூலமாக ரூ.1 கோடி 67 லட்சத்து 80ஆயிரத்து 195க்கு வணிகம் நடந்துள்ளது. வணிகத்துக்கான ஜி.எஸ்.டி., வரியை அபராத தொகையுடன் சேர்த்து ரூ.60 லட்சத்து 41 ஆயிரத்து 870ஐ நோட்டீஸ் கிடைத்த 30 நாளுக்குள் கட்ட வேண்டும். இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
அதிர்ச்சி அடைந்த சுகன்யா திண்டுக்கல் வணிகவரித்துறை அலுவலகத்திற்கு விளக்கம் கேட்டு வந்தார். அவர், கூலி வேலை செய்து தான் குடும்பம் நடத்தி வருகிறேன். யாரோ எனது ஆதார், பான் கார்டு, முகவரி அடையாளங்களை மோசடியாக பயன்படுத்தி வணிக நிறுவனம் தொடங்கி வியாபாரம் செய்துள்ளனர். நோட்டீசில் குறிப்பிட்டுள்ள நிறுவனத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது ஆவணங்கள் திருடப்பட்டுள்ளது. மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வணிகவரித்துறை அதிகாரி ராஜேஷ் கூறுகையில், ''எஸ்.ஜி., டிரேடர்ஸ் பெயரில் நிறுவனம் தொடங்கியவர்கள் ஆந்திரா மாநிலத்திற்கு பழைய இரும்பு பொருட்களை ரூ.ஒரு கோடியே 67 லட்சத்து 80 ஆயிரத்து 195க்கு விற்றுள்ளனர். இந்த வணிகம் தொடர்பாக அரசுக்கு கட்ட வேண்டிய வரியை செலுத்தவில்லை. வரி செலுத்துமாறு ஏற்கனவே மின்னஞ்சல் மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு எந்த பதிலும் இல்லாததால் கள ஆய்வு செய்ததில் பதிவு பெற்ற முகவரியில் அப்படியொரு நிறுவனம் இல்லாததால் உடனடியாக லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு நிறுவன உரிமையாளர் என்ற அடிப்படையில் சுகன்யாவின் முகவரிக்கு இரண்டாவது நோட்டீஸ் அனுப்பப்பட்டது. சுகன்யாவின் ஆவணங்கள் மோசடியாக பயன்படுத்தப்பட்டுள்ளதால் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. போலீஸ் விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

