/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பட்டாம்பூச்சிகளாய் மாறிய செவிலிய மாணவர்கள்
/
பட்டாம்பூச்சிகளாய் மாறிய செவிலிய மாணவர்கள்
ADDED : ஆக 17, 2025 12:36 AM

திண்டுக்கல்
ஏ.சி., அறைக்குள் யாரோ சிறப்பு விருந்தினர்கள் பேச அதை போரடித்து கேட்கும் மாணவர்கள் என்று இல்லாமல் பாட்டு, படிப்பு, விளையாட்டு என மகிழ்ச்சியும், மனநிறைவுமாய் நடந்து முடிந்தது திண்டுக்கல் ஜி.டி.என்., நர்சிங் கல்லுாரியில் தமிழ்நாடு செவிலியர் அசோசியேஷன் ஆப் இந்தியா சார்பில் செவிலிய மாணவர்களுக்கான 3 நாள் மாநாடு.
பொதுவாக, படிப்பு,பயிற்சி, பணி, சேவை என குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளிருக்கும் செவிலிய மாணவர்களை சிறகடித்து பறக்கும் பட்டாம்பூச்சிகளாய் மாற்றிவிட்டது இந்த மாநாடு . தமிழகம் முழுவதும் இருந்து 4500க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துக்கொண்ட இதில் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், திறமைக்கு ஏற்ற பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தி உள்ளனர்.
மாணவர்களும் புத்துணர்வுடன் புத்தாக்க பயிற்சியை முழு நிறைவாக பெற்றனர். இது குறித்த இவர்களின் கருத்துக்கள் இதோ:
வெற்றி உத்வேகம் ஜாபரி ஜெரால்டு, மாணவர், சால்வேஷன் கேதரின் நர்சிங் கல்லுாரி, கன்னியாகுமரி: தனிநபர் ஆளுமை, தனிநபர் நடிப்பு, ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றோம். கூட்டு முயற்சி பலன் தரும் என்பதற்கேற்ப பந்து எறிதலில் எங்கள் அணி வெற்றிப்பெற்று தேசியப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்ட வீரர்களை ஒரே இடத்தில் பார்த்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. சக வீரர்கள் மிகவும் அணுசரனையாக நடந்துகொண்டனர். இங்கு தங்கியிருந்த நாட்கள் எங்களுக்கு புது அனுபவத்தை தந்திருக்கிறது. இது தேசிய போட்டியிலும் நாங் வெற்றிபெறுவோம் என்ற உத்வேகத்தை தந்துள்ளது.
பங்கேற்றதை மறக்க முடியாது ஸ்ரீதுர்க்கா, மாணவி, வி.ஹெச். எச்.எம்.ஏ., சிதம்பரம் நர்சிங் கல்லுாரி, சென்னை : 2024ல் சேலத்தில் நடந்த தடகள போட்டியில் பங்கேற்றேன்.
ஆனால் இந்த முறை அதைவிடவும் அதிக விளையாட்டு வீரர்கள், அவர்களது அர்ப்பணிப்பு, பயிற்சியாளர்களின் நுணுக்கங்களையும் அறிய வாய்ப்பாக இருந்தது. வெற்றி பெற்ற அணிகளிடம் இருந்து குழு நம்பிக்கை, முயற்சி கண்டு வியப்பாக இருந்தது. விளையாட்டு, தடகளத்தில் வெற்றிபெற தொடர் பயிற்சி அவசியம்.
இனிவருங்காலத்தில் நடக்கும் போட்டிகளில் எங்கள் கல்லுாரி அணியும் சாதிக்கும். போட்டியின் ஒருபகுதியாக உலக சாதனைக்காக லோகோ அமைத்ததும், அதில் பங்கேற்றதையும் மறக்க முடியாது.
அங்கீகாரத்துக்கான முயற்சி கஜோல் பிரியா, மாணவி, வி.வி.வன்னிய பெருமாள் நர்சிங் கல்லுாரி, விருதுநகர்: போட்டிகள் நடந்த 3 நாட்களும் புதுவித அனுபவத்தை தந்தது. ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல் போன்றவற்றின் முடிவுகள் ஒரு விளையாட்டு வீரருக்கு பயிற்சி எவ்வளவு முக்கியம் என்பதை தெரியப்படுத்தின.
இங்கு நடந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
அவர்களின் திறமைக்கு அங்கீகாரம் தேடும் முயற்சியாக இந்த போட்டிகள் நடைபெற்று முடிந்திருக்கின்றன.
பொதுவாக கலை அறிவியல் கல்லுாரிகள்தான் விளையாட்டு போட்டிக்கு முக்கியத்துவம் தருவார்கள். நர்சிங் கல்லுாரி என்றால் படிப்பு, பயிற்சி மட்டுமே இருக்கும் என எண்ணியிருந்தேன்.
ஆனால் இங்கு வந்தபிறகு முற்றிலும் மாறிவிட்டது.
ஆசிய சாதனை நிகழ்வு சுதா, ஆலோசகர், தமிழக கிளை இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் சங்கம்: மாநாட்டின் முக்கிய நிகழ்வாகசுதந்திர தினத்தன்று அதிக எண்ணிக்கையில் 178 செவிலியர் பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் 3256 செவிலிய மாணவர்களை ஒன்றிணைத்து பயிற்சி பெற்ற செவிலியர் சங்கத்தின் தமிழ் மாநில லோகோவை வடிவமைத்து இந்தியா, ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெறும் முயற்சி நடந்தது.
பருந்து பார்வையில் காண்போரை கவர வைக்கும்அளவிற்கு மாணவர்கள் ஒருங்கிணைந்து நின்று லோகோவை வடிவமைத்து காட்டினர். இதன் மூலம் மாணவர் களிடையே ஒற்றுமையை மேம் படுத்தும்.
தலைமை பண்பை உருவாக்கும் முயற்சி உதயகுமார், துணைத் தலைவர், தமிழக கிளை இந்திய பயிற்சி பெற்ற செவிலயர் சங்கம்: மாணவ செவிலியர்கள் இடையே தொழில்முறை சார்ந்தவளர்ச்சியையும் சிறப்பான பயிற்சியையும் குழுவாக செயல்படுவதற்கான திறனையும், மொத்தமாக செவிலிய மாணவர்களின்வளர்ச்சியையும் மேம்பாட்டையும் பேண உறுதி கொண்டுள்ளது.
தலைமை பண்பை செவிலிய மாணவர்களிடையேஉருவாக்கி எதிர்காலத்தில் சிறந்த தலைவர்களாக செவிலிய துறையிலும் சமுதாயத்திலும் சிறந்து விளங்க உறுதி கொண்டுள்ளது.
தமிழ் மாநில செவிலிய மாணவர்கள் சங்கம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களிடையே ஒரு உந்துசக்தியாக திகழ்கிறது.