/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுமலையில் பிளாஸ்டிக் கழிவுகள் தாராளம் * வன விலங்குகள் காப்பாற்றப்படுமா
/
சிறுமலையில் பிளாஸ்டிக் கழிவுகள் தாராளம் * வன விலங்குகள் காப்பாற்றப்படுமா
சிறுமலையில் பிளாஸ்டிக் கழிவுகள் தாராளம் * வன விலங்குகள் காப்பாற்றப்படுமா
சிறுமலையில் பிளாஸ்டிக் கழிவுகள் தாராளம் * வன விலங்குகள் காப்பாற்றப்படுமா
ADDED : மார் 19, 2025 03:09 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட சுற்றுலா தலமான சிறுமலை வரும் பயணிகள் ரோட்டோரங்களில் வீசி செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளை வன விலங்குகள் சாப்பிட்டு உயிரிழக்கும் அவலம் தொடர்கிறது. வன விலங்குகளை காப்பாற்ற சிறுமலையில் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோடை காலம் துவங்கிய நிலையில் குளிர் பிரதேசங்களுக்கு மக்கள் சுற்றுலா செல்ல துவங்கியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கடைகளிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ளது. இங்கு பிளாஸ்டிக் பயன்பாடு ஓரளவு கட்டுக்குள் உள்ளது.
கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக சிறுமலைக்கு அதிகளவில் பயணிகள் வருகின்றனர். இங்கு கட்டுப்பாடு இல்லாததால் சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், பாலிதீன் கவர்கள், உணவுப்பொட்டலங்களை ரோட்டோரங்களில் வீசி செல்கின்றனர். இவற்றை அங்கு திரியும் குரங்குகள், காட்டுமாடுகள், மான்கள் சாப்பிடுகின்றன.
பிளாஸ்டிக் கழிவுகள் விலங்குகளின் வயிற்றில் தேங்கி பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வனத்துறையினர், தன்னார்வலர்கள் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தபாடில்லை.
தற்போது ஏராளமானோர் சிறுமலைக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் ரோட்டோரங்களில் அமர்ந்து உணவு சாப்பிட்டுவிட்டு பிளாஸ்டிக் கவர்கள், மீத உணவுப்பொருட்களை விலங்குகளுக்கு கொடுக்கின்றனர். அவைகளும் பசியில் பிளாஸ்டிக் பொருட்களுடன் உணவை சாப்பிடுகின்றன.
அதுமட்டுமின்றி புதுார், தென்மலை, பழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகம் உள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் சிறுமலையிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்.