ரயில் மோதி இறந்த மயில்
திண்டுக்கல்: ஈரோடு - செங்கோட்டை ரயில் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த போது அதன் இஞ்சின் பகுதியில் அடிபட்டு பெண் மயில் இறந்தது. அதன் உடலை கைப்பற்றிய ரயில்வே போலீசார் அதை வனத்துறை துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தொழிலாளி மீது தாக்குதல்
வேடசந்துார் : நிலக்கோட்டை தாலுகா பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் சுதன் 25. வேடசந்துாரில் உள்ள தனியார் பைப் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். முறையாக சம்பளம் கொடுக்காததால் நிர்வாகிகளிடம் கேட்டுள்ளார். உரிமையாளர் மகனும் மற்றொரு நபரும் சேர்ந்து என்னை குவாட்டர் பாட்டிலால் தாக்கி அலைபேசி உடைத்து விட்டதாக வேடசந்துார் போலீசில் புகார் அளித்தார். எஸ்.ஐ., பாண்டியன் விசாரிக்கிறார்.
மயக்கமடைந்த பெண் பலி
சாணார்பட்டி: மதுரை ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஜெயக்கண்ணன். இவருக்கும் சாணார்பட்டி மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கணேசன் மகள் சுதா 30, க்கும் 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுதாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மயக்கமடைந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறினர். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரிக்கிறார்.
புகையிலை கடைக்கு சீல்
வடமதுரை: திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்தவர் அப்துல் கபூர் 65. வடமதுரை சத்யா நகர் கணேசன் 52, டீக்கடைக்கு தடை புகையிலை பொருட்களை சப்ளை செய்தார். இருவரையும் வடமதுரை எஸ்.ஐ., சித்திக் கைது செய்தார். இதோடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வசந்தகுமார் கடைக்கு சீல் வைத்து ரூ. 25,000 அபராதம் விதித்தார்.
சிறுமி மாயம்
செந்துறை: செந்துறை அருகே பிள்ளையார்நத்தத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அதே பகுதி அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் முதல் காணவில்லை. நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரிக்கிறார்.
ராணுவ வீரர் பலி
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு கோம்பைட்டியை சேர்ந்தவர் வடிவேலு 42,ராணுவத்தில் ஹவில்தாரராக இருந்தார். விடுமுறைக்கு வீட்டுக்கு வந்துவிட்டு பணிக்கு ரயிலில் சென்ற போது மத்திய பிரதேசம் போபால் அருகே ரயிலில் தவறி விழுந்து பலியானார். நேற்று கிராமத்திற்கு நேற்று உடல் வந்தது. நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி உள்ளிட்ட வருவாய்த்துறையினர், ஊராட்சித் தலைவர் காமாட்சி கென்னடி , போலீசார் மரியாதை செலுத்தினர்.
கொலையில் ஒருவர் கைது
பட்டிவீரன்பட்டி : அய்யம்பாளையம் மருதாநதி பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே 60 வயது அடையாளம் தெரியாத பிச்சைக்காரரை தலையில் கல்லை போட்டு கொலை செய்த, அதே பகுதியை சேர்ந்த ராமசாமி 50, போதையில் பிச்சைக்காரரை கொலை செய்தது தெரிந்தது.அவரை பட்டிவீரன்பட்டி போலீசார் கைது செய்தனர்.
கல்லுாரி மாணவி தற்கொலை
சின்னாளபட்டி: மதுரை மாவட்டம் மேலுாரைச் சேர்ந்த விவசாயி புகழேந்தி. இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த ஜெயமாலா 22,விற்கும் 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. ஜெயமாலா காந்திகிராம பல்கலையில் பி.எஸ்.சி., வேளாண்மை பிரிவில் 4ம் ஆண்டு படித்து வருகிறார்.
இதற்காக சின்னாளபட்டி அருகே அம்பாத்துறையில் தனியே வீடு எடுத்து தங்கி இருந்தார்.நேற்று முன்தினம் அம்பாத்துறை வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். தோழியர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இறந்தார். போலீசார் கூறுகையில், 'விருப்பமின்றி நடந்த திருமணத்தால் மன உளைச்சலில் இருந்துள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது ' என்றனர்.
விஷம் குடித்து பலி
வேடசந்துார்: வேடசந்துார் காளனம்பட்டியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராமசாமி 52. வேடசந்துார் செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றவர் வீட்டு வாசலில் அமர்ந்துள்ளார். அப்போது வாயில் நுரை தள்ளியப்படி மயங்கினார். அரசு மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் விஷம் குடித்துள்ளதாக கூறி,திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். மருத்துவமனை செல்லும் வழியில் ராமசாமி இறந்தார். வேடசந்துார் எஸ்.ஐ., பாண்டியன் விசாரிக்கிறார்.