தொழிலாளி பலி
வேடசந்தூர்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் முத்துராம் 60. வேடசந்தூர் ஆத்துமேட்டில் உள்ள ஒரு கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று பஸ் ஸ்டாண்ட் நிழற்குடையில் மது போதையில் உட்கார்ந்து இருந்தவர், தடுமாறி கீழே விழுந்ததில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். வேடசந்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வீட்டிற்கு தீ வைப்பு
பட்டிவீரன்பட்டி: சித்தரேவை சேர்ந்தவர் ராஜாங்கம் 50. இவரது மகன் பூபதி 24. கூலி வேலை செய்து வருகிறார். தந்தை, மகனுக்கு இடையே குடும்பப் பிரச்னை இருந்தது. நேற்று முன்தினம் இரவு பூபதி தனது தந்தை ராஜாங்கத்திடம் தகராறில் ஈடுபட்டு, வீட்டிற்கு தீ வைத்தார். வீட்டருகே கட்டியிருந்த ஆட்டுக்குட்டியின் தலையில் கல்லைப்போட்டதில், ஆட்டுக்குட்டி இறந்தது. விபத்தில் வீட்டிலிருந்த ஆவணங்கள், துணிகள் தீயில் கருகின. பட்டிவீரன்பட்டி போலீசார் பூபதியை தேடி வருகின்றனர்.
பா.ஜ., நிர்வாகி தற்கொலை
ஒட்டன்சத்திரம்: திருவள்ளுவர் சாலையைச் சேர்ந்தவர் மருதராஜ் 50. திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ., அரசு தொடர்பு பிரிவு மாவட்ட துணைத் தலைவராக இருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மது போதையில் தகராறு
வேடசந்தூர் : குட்டம் ஊராட்சி தாசிரிபட்டியைச் சேர்ந்தவர் கார்மெண்ட்ஸ் தொழிலாளி ராஜேஸ்வரி 28. இவர் தன்னுடன் பணிபுரிந்த புதுச்சேரியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மது போதைக்கு அடிமையான வெங்கடேசன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால், ராஜேஸ்வரி கோபித்துக் கொண்டு, தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். 3 மாதங்களாக மனைவி வராததால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், மது போதையில் மாமியார் வீட்டுக்கு சென்று, ராஜேஸ்வரி மற்றும் மாமியார் பாப்பாத்தி 50, ஆகியோரை தாக்கி, தகராறில் ஈடுபட்டார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
உயிரிழப்பு
ஒட்டன்சத்திரம்: பஸ் ஸ்டாண்டில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். அவர் யார், எப்படி இறந்தார் என்பது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்றவர் கைது
கொடைக்கானல்: கடலூரை சேர்ந்தவர் மோகன பிரசாத் 24, போதைப் பொருள் சம்பந்தமாக ரோந்து பணியில் ஈடுபட்ட கொடைக்கானல் போலீசார் மோகன பிரசாத்தை சோதனையிட்டதில் 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.

