ADDED : ஜன 14, 2025 10:54 PM

கொடைக்கானல்; கொடைக்கானல் , தாண்டிக்குடி மலைப்பகுதி கோயில்களில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
இங்குள்ள ஆனந்தகிரி பெரிய மாரியம்மன், குறிஞ்சி ஆண்டவர், பூம்பாறை குழந்தை வேலப்பர், அண்ணா சாலை வரதராஜ பெருமாள், பண்ணைக்காடு மயான காளியம்மன், தாண்டிக்குடி பாலமுருகன், கானல்காடு பூதநாச்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சுவாமி ராஜ அலங்காரத்தில் கேடயத்தில் நான்கு ரத வீதிகள் வழியே வலம் நடந்தது. தென்னம்பட்டி சவடம்மன், நந்தீஸ்வரன் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அய்யலுார் வண்டிகருப்பணசுவாமி கோயில், வடமதுரை, எரியோடு சுற்றுப்பகுதி கிராம குல தெய்வ கோயில்களுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
சின்னாளபட்டி: சதுர்முக முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. மூலவருக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. உற்ஸவர் வள்ளி, தேவசேனா சுப்பிரமணியருக்கு மலர் அலங்காரத்துடன் தீபாராதனைகள் நடந்தது. ரெட்டியார்சத்திரம் ராமலிங்கம்பட்டி பாதாளசெம்பு முருகன் கோயிலில் மூலவருக்கு பாலாபிஷேகம், ராஜ அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், ரெட்டியார்சத்திரம் கோபிநாதசுவாமி கோயில், கொத்தபுள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திண்டுக்கல் சீரடி சாய்பாபா கோயிலில் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்தனர். தொடர்ந்து பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் , தீபாராதனைகள் நடைபெற்றது பக்தர்களுக்கு பிரசாதமாக பொங்கல் வழங்கப்பட்டது.
பழநி: பழநி முருகன் கோயிலில் தை மாத பிறப்பை முன்னிட்டு ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி யாகம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட கலசநீரில் விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம், தீபாராதனையும் நடைபெற்றது.