/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் வீதிகளில் குவிந்த பொதுமக்கள்
/
திண்டுக்கல்லில் வீதிகளில் குவிந்த பொதுமக்கள்
ADDED : அக் 19, 2025 03:39 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் கடைவீதிகளில் புத்தாடைகள், இனிப்புகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். போக்குவரத்து ஸ்தம்பிப்பால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.
நாளை (அக்.20) தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் புத்தாடை, பட்டாசு, இனிப்புகள் வாங்க திண்டுக்கல் பஜார்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சாலையோரங்களிலும் தற்காலிக ஜவுளி கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் குவிக்கப்பட்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக சாலை, கமலாநேரு மருத்துவமனை சாலை, மெயின் ரோடு, கிழக்கு, மேற்கு ரதவீதிகள், ஏ.எம்.சி.,சாலைகளில் உள்ள ஜவுளிக் கடைகள், பிளாட்பார கடைகள், பர்னிச்சர் கடைகள், செருப்புக்கடைகள், பேன்சி பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்திருந்தனர்.
இதனால் பஸ் நிலைய சாலை, மெங்கில்ஸ் ரோடு, சாலை ரோடு, திருச்சி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கார்கள், பஸ்கள், டூவீலர்கள் நீண்டவரிசையில் அணிவகுத்து நின்றன. அண்ணா சிலை, மாநகராட்சி சாலை உள்ளிட்ட நெரிசல் ஏற்படும் முக்கிய இடங்களில் போலீசார் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணித்தனர்.