UPDATED : அக் 24, 2026 03:20 AM
ADDED : அக் 23, 2026 09:57 PM

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வெளுத்து வாங்கிய மழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது.
கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்தது. தொடர்ந்து நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியம் 4 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் உட்வில் ரோடு, செண்பகனுார், டைகர் சோலையில் விழுந்த மரங்கள் உடனே அகற்றப்பட்டன. ஏரிச்சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி கடைகளுக்குள் புகுந்தது. பல இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்தது. கொடைக்கானல் நகர், தாண்டிக்குடி, மேல்மலையில் மின்தடை ஏற்பட்டது.
கனமழையால் அடுக்கம் ரோடு சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் செண்பகனுார் உகார்தே ரோடு அரிக்கப்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து பாலத்தை கடந்து சென்றதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை கொடைக்கானலில் 166 மி.மீ., மழை பதிவானது. தொடர் மழை பெய்யும் நிலையில் தாழ்வான பகுதியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
