/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு டவுன் பஸ் சேவை குறைப்பு ; அமைச்சர் தொகுதியில் மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள் அவதி
/
அரசு டவுன் பஸ் சேவை குறைப்பு ; அமைச்சர் தொகுதியில் மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள் அவதி
அரசு டவுன் பஸ் சேவை குறைப்பு ; அமைச்சர் தொகுதியில் மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள் அவதி
அரசு டவுன் பஸ் சேவை குறைப்பு ; அமைச்சர் தொகுதியில் மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள் அவதி
ADDED : ஆக 28, 2024 07:29 AM

கன்னிவாடி : ஆத்துார் தொகுதியில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களின் சேவையை முன்னறிவிப்பின்றி குறைக்கப்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் கிராமங்களுக்கான சேவை பாதிப்பால் மாணவர்கள், மகளிர், கூலித்தொழிலாளிகள் உள்ளிட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து குட்டத்துப்பட்டி, திப்பம்பட்டி வழியே கன்னிவாடிக்கு அரசு பஸ்கள் மட்டுமே உள்ளன.
சுற்று கிராமங்களைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று திரும்ப அரசு பஸ் வசதியை பயன்படுத்துகின்றனர்.
தனியார் பஸ் வசதியற்ற வழித்தடமாக உள்ள நிலையில் பள்ளி நேரங்களில் போதியளவு அரசு டவுன் பஸ்கள் இத்தடத்தில் இல்லை.
பஸ்களை இயக்குவதில் அதிகாரிகள் அலட்சியத்தால், அடிக்கடி டிரிப்-கட் செய்யப்படும் நிலை தொடர்கிறது. வெளிமாவட்ட சிறப்பு பஸ்களின் இயக்கத்திற்காக கிராம பஸ்களை மாற்றி அனுப்புகின்றனர்.
வழக்கமான வழித்தடங்களை தவிர்த்து மாற்று வழித்தடங்களை ஊழியர்கள் பயன்படுத்துவது, இரவு நேரத்தில் கடைசி டிரிப்களில் பஸ் ஸ்டாண்டிற்கு செல்வதை தவிர்த்து டெப்போக்களுக்கு நேரடியாக கொண்டு செல்வது, இதற்காக பயணிகளை ஏற்ற மறுத்து திண்டுக்கல் பைபாஸ் பகுதிகளில் இறக்கி விடுவது போன்ற புகார்களும் நீடிக்கிறது.
அதிகாரிகள் அலட்சியம் மட்டுமின்றி ஊழியர்களின் தன்னிச்சையான செயல்பாடுகளால் மகளிர், கூலித்தொழிலாளர்கள், மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
போதாக்குறைக்கு குட்டத்துப்பட்டி, கசவனம்பட்டி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் அரசு பஸ் சேவை அவ்வப்போது நிறுத்தப்பட்டு வந்தது. தற்போது பல டிரிப்கள் முழுமையாக நிறுத்தி விட்டனர். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை அவசியமாகிறது.
பரிதாப பயணம்
பா.சிவராமன், கூலித்தொழிலாளி, கசவனம்பட்டி: அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால் அரசு பஸ்கள் இயக்கத்தில் அடிக்கடி முன்னறிவிப்பின்றி தடை ஏற்படுத்துகின்றனர்.
பஸ் சேவையை முன்னறிவிப்பின்றி நிறுத்துவதால் சிகிச்சைக்கு புறப்படும் நோயாளிகள், தேர்வுக்கு புறப்படுவோர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பாதிப்படைகின்றனர்.
மைலாப்பூர் வழித்தட பஸ் காலை, இரவு நேரங்களில் சில கிராமங்களை புறக்கணித்து டிரைவர், கண்டக்டர் விருப்பத்திற்கேற்ப இயக்கப்படுகிறது. மாலை 4:30 மணிக்கு திண்டுக்கல் நோக்கி ஒருவழி தடமாக இயங்கி வந்த அரசு பஸ் சில வாரங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது.
மழை, இரவு நேரங்களில் மாணவர்கள், கூலித்தொழிலாளிகள் வீடு வந்து சேர்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
நிறுத்தம் தாராளம்
வர்க்கீஸ், சமூக ஆர்வலர், குட்டத்துப்பட்டி: மைலாப்பூர் துவங்கி ஆவரம்பட்டி, குட்டத்துப்பட்டி, குஞ்சனம்பட்டி, என 20க்கு மேற்பட்ட குக்கிராமத்தினர் அரசு பஸ் வசதியை நம்பியுள்ளனர்.
இரவு 8:00 மணிக்கு மேல் இத்தடத்தில் திண்டுக்கல்லில் இருந்து நவாப்பட்டி வரை போக்குவரத்து வசதி இல்லை. விசேஷ நாட்களில் அரசு டவுன் பஸ்களை வேறு மாவட்ட சிறப்பு பஸ்சாக அனுப்பி விடுகின்றனர்.
சில நாட்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6:00 மணிக்கு மேல் கோனுார் வழியாக செல்லும் அரசு பஸ்சை இயக்காமல் முற்றிலும் நிறுத்தி விட்டனர்.
-கூலித்தொழிலாளர்கள் அவதி
ரஜினி, வியாபாரி, தருமத்துப்பட்டி: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து தனியார் பஸ்கள் வழக்கம் போல் வடக்கு ரத வீதி, மேற்கு தாலுகா அலுவலகம், கோட்டை மாரியம்மன் கோயில் வழியாக இயங்குகின்றன. இப்பகுதியை சேர்ந்த நுாற்றுக்கணக்கான கூலித்தொழிலாளர்கள் பயன்பெறுவர்.
ஆனால் தருமத்துப்பட்டி, கசவனம்பட்டி, கன்னிவாடி செல்லும் அரசு டவுன் பஸ்கள் மட்டும் டிரைவர் கண்டக்டர் விருப்பத்திற்கேற்ப தொடர்பில்லாத, நாகல்நகர் வழியே செல்கின்றன. மகளிர், கூலித் தொழிலாளர்கள், தினமும் வேலைக்கு சென்று திரும்ப முடியாமல் அவதிப்படுகின்றனர்.