/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆக்கிரமிப்புகளால் வறண்ட சிறுநாயக்கன்பட்டி கண்மாய்
/
ஆக்கிரமிப்புகளால் வறண்ட சிறுநாயக்கன்பட்டி கண்மாய்
ADDED : மார் 28, 2025 04:55 AM

கன்னிவாடி : வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளால் சிறுநாயக்கன்பட்டி கண்மாய் சில ஆண்டுகளாக தொடர் மழை காலத்திலும் தண்ணீரின்றி வறண்டு காணப்படும் அவலம் நீடிக்கிறது.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் டி.புதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சிறுநாயக்கன்பட்டி கண்மாய். 80 ஏக்கரில் உள்ள இக்கண்மாய்க்கு தெத்துப்பட்டி, டி.பண்ணைப்பட்டி, பெரிய கோம்பை நீர்த்தேக்க மறுகால் வரத்து மட்டுமே முக்கிய ஆதாரமாகும். இது தவிர வரத்து வாய்க்காலை சுற்றிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் கூடுதல் வரத்து ஆதாரமாக இருந்தது. 3 மதகுகள், 8 சதுர கிலோ மீட்டர் வரை நீர் பிடிப்பு பகுதியாக கொண்டு உருவாக்கப்பட்ட கண்மாயில் மதகுகள் மூலம் சுற்றிய பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான வழித்தட அமைப்புகள் உள்ளன. சுற்றிய கிராமங்களின் நிலத்தடி நீர் ஆதாரத்தை வலுப்படுத்தும் வகையில் கட்டமைப்பு உள்ளது.
பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி வரத்து வாய்க்கால், கண்மாயின் நீர் தேங்கும் பகுதிகளில் மண் மேவியுள்ளது. வரத்து வாய்க்காலின் பெரும்பகுதி ஆக்கிரமிப்புகளில் சிக்கி உள்ளன. சில ஆண்டுகளாக வறட்சி நீடிக்கும் இக்கண்மாய்க்கு தொடர் மழை நேரங்களில் கூட தண்ணீர் வரத்து இல்லை. 40 சதவீத கண்மாய் பரப்பு விவசாய நிலமாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. எஞ்சிய பகுதி முழுவதும் சீமைக்கருவேல மரங்கள், புதர்ச்செடிகள் அடர்ந்துள்ளன. கண்மாய் முழுவதுமாக துார்ந்த நிலையில் பெயரளவில் ஆவணங்களில் மட்டுமே நீர் ஆதாரமாக இடம் பெற்றுள்ளது. இதனை மேம்படுத்தி இப்பகுதியின் நிலத்தடி நீராதாரத்தையும், சாகுபடி வளத்தையும் மீட்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
மண்டிய சீமைக்கருவேலங்கள்
தங்கச்சாமி, விவசாயி, டி.புதுப்பட்டி : தெத்துப்பட்டி கண்மாயில் இருந்து வரத்து தண்ணீர் கடந்து வருவதில் ஏராளமான தடைகள் உள்ளன. வரத்து வாய்க்காலில் வரும் சொற்ப தண்ணீரும், கண்மாய்க்கு வந்து சேர வழி இல்லாத நிலை நீடிக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இருந்தபோதும் மறுகால் நீர் கண்மாயை வந்தடைவதில்லை. கனமழை பெய்த போதும் வரத்து வாய்க்கால்கள் காணாமல் போனதால் தண்ணீர் வருவது முற்றிலுமாக தடைபட்டுள்ளது. கண்மாயின் உள்பகுதியில் ஆக்கிரமிப்பு விவசாயம் தாராளமாக நடக்கிறது. இவற்றை மீட்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. கண்மாய்க்கான அறிகுறியே இல்லாத அளவிற்கு சீமைக்கருவேல மரங்கள் மண்டியுள்ளன.
-க-டுமையாக பாதிப்பு
சக்திவேல், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர், ரெட்டியார்சத்திரம் : வரத்து வாய்க்காலின் இரு புறமும் விவசாயிகளின் ஆக்கிரமிப்பால் பெரும் பகுதி மாயமாகிவிட்டது. வரத்து நீர் கடந்து வருவதற்கான வழித்தடத்தை மறைத்துள்ளனர். கரைப்பகுதிகள் மழை நீரால் அரிக்கப்பட்டு குண்டும் குழியுமாக உள்ளன. பல இடங்களில் கரை சேதம் அடைந்துள்ளதால் இவ்வழியே பாதசாரிகள் கூட நடந்து செல்ல முடியவில்லை. 3 மதகுகளும் பராமரிப்பின்றி தூர்ந்துள்ளன. பாசனத்திற்காக தண்ணீர் செல்வதற்கான பாதை தடைபட்டுள்ளது. கண்மாயை மட்டுமே நம்பி உள்ள விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அதிக வரத்து நீர் வரும் சூழலில் கண்மாயில் தேங்கி நிற்க இடமில்லை. முழுவதுமாக புதர் மண்டியுள்ளது. பராமரிப்பு இல்லாததால் வரத்து நீர் முழுவதுமாக மறுகால் வழியே வெளியேறும் நிலை உள்ளது.
--பெயரளவில் கூட நடக்கவில்லை
சென்றாயப்பெருமாள், விவசாயி, சிறுநாயக்கன்பட்டி : தெற்கு மதகு மூலம் சிறுநாயக்கன்பட்டி நிலங்களும் நடு மதகு மூலம் முத்துராம்பட்டி, குளத்துப்பட்டி கிராமங்களும் வடக்கு மதகு மூலம் முத்துராம்பட்டியின் மற்றொரு பகுதி, கோபிநாத சுவாமி கோவில் அருகே உள்ள ஓடை வரையான பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும். கண்மாயில் வண்டல், சுக்கா மண் வளத்தை சமூக விரோதிகள் திருடி செல்கின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. ஒன்றிய நிர்வாகம் கவனம் செலுத்தவில்லை. இதுவரை முழுமையான துார்வாருதல், கரை பலப்படுத்தல், வரத்து நீர் ஆதார பராமரிப்பு பணிகள் பெயரளவில் கூட நடக்கவில்லை என்றார்.