ADDED : அக் 26, 2025 02:14 AM

தாண்டிக்குடி: வரத்து அதிகரிப்பால் சவ்சவ் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.அதே நேரத்தில் மழையால் தக்காளி விலை உயர்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி பகுதியில் ஏராளமான ஏக்கரில் பந்தல் அமைத்து சவ்சவ் விவசாயம் செய்யப்படுகிறது. இது விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருந்த நிலையில் காட்டுப்பன்றி தாக்குதல், மொசைக் வைரஸ் பாதிப்பால் 10 ஆண்டாக விவசாய பரப்பு சுருங்கியது. தற்போது விவசாயிகள் சூரிய மின்வேலி, நவீன தொழில்நுட்பயுக்தியுடன் இவ்விவசாயத்திற்கு புத்துயிர் அளித்து சில மாதங்களுக்கு முன் நடவு செய்தனர்.
முழு வீச்சில் காய்கள் பறிக்கப்படும் நிலையில் தொடர் மழையால் வரத்து அதிகரித்தது. காய்கள் மதுரை, திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு அனுப்பப்படுகிறது. கிலோ ரூ. 10 க்கு விற்ற நிலையில் தற்போது கிலோ ரூ. ஐந்துக்கு விற்பனையாகிறது. விலை கட்டுபடியாகாத நிலையில் வேறு வழியின்றி காய்களை பறித்து லாரி வாடகையை கையிலிருந்து கொடுக்கும் பரிதாப நிலையில் விவசாயிகள் உள்ளனர். எனினும் சில்லரையில் கிலோ ரூ. 20க்கு குறையாமல் விற்கப்படுவது குறிப்பிடதக்கது.
விலை உயர்ந்த தக்காளி ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சுற்றுப்பகுதிகளில் தக்காளி அதிகமாக விளைவிக்கப்படுகிறது. ஒரு வாரத்திற்கு முன் வரத்து அதிகமாக இருந்ததால் கிலோ ரூ.20 க்கு விற்பனையானது. தற்போது பெய்த மழை காரணமாக தக்காளி செடிகளில் இருந்த பூக்கள் உதிர விளைச்சல் பாதிக்கப்பட்டு மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்தது. இதன் காரணமாக விலை அதிகரித்துள்ளது. நேற்று கிலோ தக்காளி கிலோ ரூ.30க்கு விற்பனையானது.
வியாபாரி கூறுகையில் 'இனிவரும் நாட்களில் வரத்து இன்னும் குறைய வாய்ப்புள்ளதால் விலை அதிகரிக்கும்'என்றார்.

