/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பிரச்னையும் தீர்வும் பகுதிக்காக... நெடுஞ்சாலையில் லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்படும் கழிவுகள்
/
பிரச்னையும் தீர்வும் பகுதிக்காக... நெடுஞ்சாலையில் லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்படும் கழிவுகள்
பிரச்னையும் தீர்வும் பகுதிக்காக... நெடுஞ்சாலையில் லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்படும் கழிவுகள்
பிரச்னையும் தீர்வும் பகுதிக்காக... நெடுஞ்சாலையில் லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்படும் கழிவுகள்
ADDED : அக் 01, 2024 05:31 AM

வேடசந்துார்: வேடசந்துார் கரூர் நெடுஞ்சாலையில் கணவாய் மேடு பகுதியில் லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்படும் தொடர் கழிவு பொருட்களால் அப்பகுதியே குப்பை மேடாக நிறைந்திருக்கிறது. கழிவு பொருட்கள் கொட்டுவதை கண்டித்து போதிய நடவடிக்கைகளை எடுக்க நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் முன் வர வேண்டும்.
திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலை இருவழி சாலையாக இருந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து சிரமம் இன்றி இடையூறுகள் இன்றி தங்களது பயணத்தை தொடர்கின்றனர். நான்கு வழி சாலையாக மாற்றப்பட்ட புதியதில் வழியிடை கிராம மக்கள் ஆங்காங்கே விபத்துக்கு உள்ளாகினர். காலப்போக்கில் கவனம் கூடுதலாக தற்போது விபத்துக்கள் குறைந்துள்ளது .
இந்நிலையில் வேடசந்தூர் கரூர் நெடுஞ்சாலையில் மாவட்ட எல்லை பகுதியான ரங்கமலை கணவாய் அருகே நெடுஞ்சாலையின் ஓரப்பகுதியில் லாரி ஓட்டுநர்கள் ஓய்வு எடுத்து செல்வது வழக்கம். அது மலைப்பகுதி என்பதால் காலை நேரங்களில் இயற்கை உபாதைகளை கழித்து விட்டு சிறிது நேர ஓய்வுக்குப் பின் செல்வது வாடிக்கையாகவே உள்ளது. ஆனால் சமீப காலமாக ரோட்டோரம் கழிவு பொருட்களான கழிவு கோழி முட்டைகளை அட்டையுடன் கொட்டுவது,
ஆகாத பிளாஸ்டிக் பொருட்களை கொட்டுவது, சாக்கு பைகளை தள்ளி விட்டு செல்வது, ஆகாத வெங்காய கழிவுகளை கொட்டிச் செல்வது வாடிக்கையாக உள்ளது. இவற்றை யார் கொட்டிச் செல்கிறார்கள், எந்த லாரியில் இருந்து கொட்டுகிறார்கள் என்பதை யாரும் கவனித்து நடவடிக்கை எடுப்பது இல்லை. மலையோர பகுதி என்பதால் கண்டு கொள்வதில்லை. காலமாற்றம் ,மக்களின் தெளிவு நடவடிக்கைகள் காரணமாக வெங்காய கழிவு மூடைகள் கொட்டி கிடப்பதை கூட துர்நாற்றம் வீசுவதாக வாட்ஸ் ஆப்களில் பரவ செய்கிறார்கள்.
திண்டுக்கல் மாவட்ட எல்லையான ரங்கமலை கணவாய் முதல் அடுத்துள்ள கரூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் விபத்து பகுதி என்றும், திருடர்கள் ஜாக்கிரதை, லாரிகளை நிறுத்த வேண்டாம் என ஆங்காங்கே போர்டுகளை வைத்து கரூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் திண்டுக்கல் மாவட்ட எல்லை பகுதி மட்டுமே இப்படி குப்பை காடாக எந்த முன் எச்சரிக்கை போர்டுகளும் இல்லாமல் உள்ளது .ஆகாத கழிவு பொருட்களை லாரிகளில் கொண்டு வந்து ஆங்காங்கே வழி நெடுக கொட்டுவதற்கு பதிலாக ஏதேனும் குறிப்பிட்ட ஓர் இடத்தில் கொட்டி அதை முறையாக அகற்ற மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் .
..........
மூச்சு விடவே சிரமம்
டி.ராமசாமி, குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர், வேடசந்துார்: திண்டுக்கல் கரூர் மாவட்ட எல்லைப் பகுதியான ரங்கமலை கணவாய் அருகே கூடுதலான கழிவு பொருட்களை கொட்டி உள்ளனர். இதேபோல் திண்டுக்கல் கலெக்டரேட் அடுத்துள்ள செங்குளம் பகுதி பழநி பைபாஸ் ரோடு பகுதி, தோமையார்புரம் நெடுஞ்சாலை ஓரப்பகுதி மாவட்டத்தின் முக்கிய நெடுஞ்சாலை ஓரங்களில் கழிவு பொருட்களை கொட்டுவது வாடிக்கையாக உள்ளது. மாவட்ட நிர்வாகம், காவல்துறை, ஊராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்து பேசி முறையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முடியாவிட்டால் கழிவுப் பொருட்களை கொட்டுவதற்கு என ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து ஒதுக்கி அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் மூச்சு விடவே சிரமப்படும் நிலை ஏற்பட்டு விடும் .
..................
பெரும் தொற்றுக்கு வாய்ப்பு
இல.சக்திவேல், சமூக ஆர்வலர், வேடசந்துார்: நெடுஞ்சாலை ஓரங்களில் தொடர்ந்து கழிவுப்பொருட்களை கொட்டி வருவதால் போக்குவரத்தில் துர்நாற்றம் வீசுகிறது. இதனாலும் தொற்று பரவும் வாய்ப்புண்டு. கொட்டப்படும் உண்ணக்கூடிய கழிவு பொருட்களை
தெரு நாய்கள் தின்பதால் வெறிபிடித்து அலைகின்றன. இது போன்ற இடங்களில் கண்காணிப்பு கேமரா வைத்து கழிவுகளை கொட்டுவோர் என்பதை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையேல் மக்கள் பெரும் தொற்றுக்கு ஆளாக நேரிடும் நிலை உருவாகும்.
....................
தீர்வு:
மாவட்ட நிர்வாகம் ரோட்டோரம் கொட்டப்படும் கழிவு பொருட்கள் குறித்து விரைந்து ஓர் ஆய்வு கூட்டத்தை நடத்த வேண்டும். அதில் ஊராட்சி, பேரூராட்சி நகராட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களையும் அழைக்க வேண்டும் .வளர்ந்து வரும் நாகரீக காலத்தில் ரோட்டோரம் கழிவு பொருட்களை கொட்டாமல் இருக்க மாற்று நடவடிக்கை குறித்து ஆலோசிக்க வேண்டும். மாவட்ட அளவில் 6 அல்லது 10 இடங்களில் கழிவுகளை கொட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். அந்த கழிவுகளை முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும். தற்போது உள்ளது போல் கண்ட இடங்களில் குப்பை கொட்டினால் போதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். முக்கிய இடங்களில் சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை செயல்படுத்தலாம்.
****