/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பித்தளைப்பட்டி- - தருமத்துப்பட்டி ரோடு பணியில் அலட்சியம் அறிவிப்பு பலகை இல்லாததால் விபத்துக்கள் ஏராளம்
/
பித்தளைப்பட்டி- - தருமத்துப்பட்டி ரோடு பணியில் அலட்சியம் அறிவிப்பு பலகை இல்லாததால் விபத்துக்கள் ஏராளம்
பித்தளைப்பட்டி- - தருமத்துப்பட்டி ரோடு பணியில் அலட்சியம் அறிவிப்பு பலகை இல்லாததால் விபத்துக்கள் ஏராளம்
பித்தளைப்பட்டி- - தருமத்துப்பட்டி ரோடு பணியில் அலட்சியம் அறிவிப்பு பலகை இல்லாததால் விபத்துக்கள் ஏராளம்
ADDED : ஜன 09, 2024 05:42 AM
கன்னிவாடி: பித்தளைப்பட்டி -தருமத்துப்பட்டி ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் விரிவாக்க பணி நடப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில் பாலங்கள் புதுப்பித்தலில் நீடிக்கும் அலட்சியத்தால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் பித்தளைப்பட்டி -தருமத்துப்பட்டி ரோட்டில் தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. பல இடங்களில் தனியார் ஆக்கிரமிப்புகளால் போதிய அகலம் இல்லை.
வாகன போக்குவரத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் விரிவாக்கத்திற்கான கோரிக்கை நீடித்தது.
நெடுஞ்சாலைத்துறை சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் சில மாதங்களுக்கு முன், ரோடு விரிவாக்க பணிகள் துவங்கின. 6க்கு மேற்பட்ட தரைநிலை பாலங்கள் புதுப்பிக்கும் பணி நடக்கிறது.
இவை முழுமையாக அகற்றப்படாமல் போக்குவரத்திற்கென குறுகிய பகுதியை ஒதுக்கி உள்ளனர். சில இடங்களில் ரோட்டோர பகுதியில் குழி தோண்டி கான்கிரீட் கலவை ஆங்காங்கே பாதியளவு நிரம்பி உள்ளன.
இதனால் இதன் பணி பல வாரங்களாக ஆமை வேகத்தில் நடக்கிறது. இருப்பினும் பெரும்பாலான இடங்களில் போதிய எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் இல்லை. இரவு நேரங்களில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன.
கனரக வாகனங்கள் எதிரே வரும் போது டூவீலர் கூட கடந்து செல்ல முடியவில்லை. சாரல் மழை நேரங்களில் பாலங்களை கடந்து செல்வதில் சிரமம் உள்ளது.
அதிகாரிகளின் போதிய கண்காணிப்பு இல்லாததால் விபத்து அபாய அம்சங்கள் பலரையும் பாதிப்பிற்குள்ளாக்கி வருகிறது. ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி பாதுகாப்பான சூழலில்ரோடு விரிவாக்க பணி நடப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
ஆமை வேக பணியால் அவதி
லட்சுமண மணிகண்டன், பா.ஜ., மாவட்ட சமூக ஊடக துணைத் தலைவர், பித்தளைப்பட்டி: 2 மாதங்களுக்கு முன் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள இந்த ரோட்டின் விரிவாக்க பணிகள் துவங்கின. பல வாரங்களாகியும் தற்போது வரை 30 சதவீத பணிகள் கூட முழுமை பெறவில்லை. பாலங்கள் சீரமைப்பு பகுதியில் குழாய் பாலங்களின்றி குறுகலான சூழலில் பாதி அளவு வாகன போக்குவரத்திற்கு ஒதுக்கியுள்ளனர்.
எஞ்சிய பகுதியில் புதிய பாலங்களின் கட்டுமானத்திற்கான கான்கிரீட் பணிகள் நடக்கிறது. மறுபுறத்தில் சில இடங்களில் மட்டும் 2 அடி தூரத்திற்கே மண் குவித்த பாதை உள்ளது. இரு சக்கர வாகனங்கள் வலுவற்ற தரைப்பகுதியை கடந்து செல்வதில் சிரமம் உள்ளது.
தடுமாறும் வாகனங்கள்
பி.மணி, விவசாயி, வெல்லம்பட்டி: பித்தளைப்பட்டி துவங்கி சூசைபட்டி, அனுமந்தராயன்கோட்டைஉட்பட30க்கு மேற்பட்டகிராமத்தினர் இத்தடத்தை நம்பி உள்ளனர். பாலம் சீரமைப்பு பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு இல்லாமல் விபத்துக்கள் தொடர்கிறது.
சீரமைப்பு பகுதியில் எதிர்புற பக்கவாட்டில் சமப்படுத்தாத மேடு பள்ளங்களுடன் போக்குவரத்திற்கு பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
பாலத்தின் இணைவு பகுதியில் எதிர்ப்புற ரோடு போதிய அகலமின்றி குறுகலாக உள்ளது.
இப்பகுதியில் சீரமைப்பதில் தாமதப்போக்கு தொடர்கிறது. இரவு நேரத்தில் பள்ளங்கள் சரிவர தெரியாமல் வாகன ஓட்டிகளை தடுமாற செய்கின்றன.
அரசு பஸ்களின் அலட்சியம்
பா.சிவராமன் கூலித்தொழிலாளி, கசவனம்பட்டி: சாரல் மழையின் போது சேறும் சகதியுமான சூழலில் இடையிடையே மழைநீர் குட்டை போல் தேங்குகிறது.அதிகாரிகளின் போதிய கண்காணிப்பு இல்லாததால் சீரமைப்பு பணியில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இதனை காரணம் கூறி அரசு பஸ்கள் இயக்கத்தில் தடை ஏற்படுத்துகின்றனர். திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து தனியார் பஸ்கள் வழக்கம் போல் வடக்கு ரத வீதி, மேற்கு தாலுகா அலுவலகம், கோட்டை மாரியம்மன் கோயில் வழியாக இயங்குகின்றன.
ஆனால் தருமத்துப்பட்டி, கசவனம்பட்டி, கன்னிவாடி வழித்தட அரசு டவுன் பஸ்கள் மட்டும் டிரைவர் கண்டக்டர் விருப்பத்திற்கேற்ப தொடர்பில்லாத நாகல்நகர் தடத்தில் செல்கின்றன.
பெண் கூலித் தொழிலாளர்கள் தினமும்அவதிப்படுகின்றனர்.