/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் 2வது நாளாக நீடித்த நெரிசலால் அவதி
/
'கொடை'யில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் 2வது நாளாக நீடித்த நெரிசலால் அவதி
'கொடை'யில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் 2வது நாளாக நீடித்த நெரிசலால் அவதி
'கொடை'யில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் 2வது நாளாக நீடித்த நெரிசலால் அவதி
ADDED : ஆக 17, 2025 02:08 AM

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர் விடுமுறையையடுத்து குவிந்த சுற்றுலாப்பயணிகளால் 2 வது நாளாக நேற்றும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
கொடைக்கானலில் தினமும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். சுதந்திர தினம், வார விடுமுறை என தொடர் விடுமுறையால் ஏராளமான பயணிகள் முகாமிட்டுள்ளனர். நேற்று முன்தினம் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நேற்றும் 2 வது நாளாக பெருமாள்மலையிலிருந்து வெள்ளி நீர்வீழ்ச்சி, உகார்தே நகர், மூஞ்சிக்கல், அப்சர்வேட்டரி, ஏரிச்சலை, நாயுடுபுரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வெள்ளி நீர்வீழ்ச்சியிலிருந்து நகருக்குள் நுழைய 2 மணி நேரமானது. நகருக்குள் வாகனங்கள் ஊர்ந்து கொண்டே சென்றன. இதனால் பயணிகள், உள்ளூர்வாசிகள் அத்தியாவசிய தேவைகளுக்காக அவதியுற்றனர். நகரில் போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்ட போதும் அவர்களால் நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.
மேல்மலை பகுதியான பூம்பாறை, மன்னவனுார், கவுஞ்சி உள்ளிட்ட மலை கிராமங்களில் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.
மேல்மலை கிராம மக்கள் தங்கள் கிராமப்பகுதிகளுக்கு செல்வதில் சிரமமுற்றனர். விவசாய விளை பொருட்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் விரைந்து கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கொடைக்கானலுக்கு மாற்று ரோடு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலமே போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு பிறக்கும்.