/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாங்க ஆர்வம் காட்டாத வியாபாரிகள் மண்பானைகள் விற்பனையில் மந்தம்
/
வாங்க ஆர்வம் காட்டாத வியாபாரிகள் மண்பானைகள் விற்பனையில் மந்தம்
வாங்க ஆர்வம் காட்டாத வியாபாரிகள் மண்பானைகள் விற்பனையில் மந்தம்
வாங்க ஆர்வம் காட்டாத வியாபாரிகள் மண்பானைகள் விற்பனையில் மந்தம்
ADDED : டிச 18, 2024 05:39 AM

திண்டுக்கல் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மண்பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கும் நிலையில் மார்கழி துவங்கியும் மொத்தமாக கொள்முதல் செய்ய வியாபாரிகள் வருகை குறைவாக உள்ளது. இதனால் மண்பானைகள் வியாபாரம் மந்தமாக உள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
இம்மாவட்டத்தில் பறைப்பட்டி, சாணர்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான மண்பாண்ட உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்கள் களிமண்ணால் பொங்கல் பானைகள், பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை செய்து வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் பொங்கல் பானைகள் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண் பானைகள் பொங்கலுக்காக மட்டுமே விற்பனையாகும். வியாபாரிகளும் கொள்முதல் செய்து தங்கள் பகுதிகளுக்கு வாங்கி சென்று விற்பர்.
இந்தாண்டு மார்கழி பிறந்தும் கூட இதுவரை வியாபாரிகள் வராததால் மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனையில் உள்ளனர்.
மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது : களிமண்ணை கனமழையால் கண்மாயிலிருந்து எடுக்க முடியவில்லை. இந்த நெருக்கடியால் பலர் தொழிலை விட்டே சென்று விட்டனர். சில ஆண்டுகளுக்கு முன் வரை நுாற்றுக்கும் மேற்பட்டோர் இத்தொழிலை செய்து வந்தனர். தற்போது 15 பேர் வரை மட்டுமே மண்பானை தொழிலில் ஈடுபட்டுள்ளனர். போதிய வருமானம் இல்லாததால் மற்ற வேலைக்கு செல்லும் அவலம் உள்ளது.
மழையால் இத்தொழில் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. வியாபாரிகள் வருகை இல்லாததால் 3 மாதங்களுக்கு முன்பு உற்பத்தியான பொருட்கள் கூட விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளன. 2023ல் கார்த்திகை மாதத்திலே 12 ஆயிரம் பொங்கல் பானைகள் விற்பனையாகின. இந்தாண்டு இதுவரை மொத்த வியாபாரி ஒருவர் கூட வரவில்லை என்றனர்.