/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரயில்வே சுரங்கப்பாதை பணி நிறுத்தத்தால் போக்குவரத்து பாதிப்பு
/
ரயில்வே சுரங்கப்பாதை பணி நிறுத்தத்தால் போக்குவரத்து பாதிப்பு
ரயில்வே சுரங்கப்பாதை பணி நிறுத்தத்தால் போக்குவரத்து பாதிப்பு
ரயில்வே சுரங்கப்பாதை பணி நிறுத்தத்தால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூலை 08, 2025 01:49 AM

வேடசந்துார்: கோவிலுார் வேடசந்துார் ரோட்டில் திண்டுக்கல் கரூர் ரயில்வே லைன் குறுக்கிடும் நிலையில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்றன. இரண்டு ஆண்டுகளாகியும் பணி முடியாததால் பஸ் போக்குவரத்து உள்ளிட்ட வாகனங்கள் சுற்றி செல்கின்றன. பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
திண்டுக்கல் கரூர் ரயில்வே லைனில் மெயின் ரோடு குறுக்கிடும் இடங்களில் எல்லாம் ரயில்வே நிர்வாகம் சார்பில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலான இடங்களில் ரயில்வே சுரங்கப்பாதை அமைத்துள்ளனர். புளியம்பட்டி ஆர்.புதுக்கோட்டை ரோடு உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே ஊற்று நீர் பெருக்கெடுத்து அவ்வப்போது வாகன ஓட்டிகளை சிரமத்திற்கு ஆளாக்கி வருகிறது.
கோவிலுார் வேடசந்துார் ரோட்டில் தங்கச்சியம்மாபட்டி அருகே குறுக்காக செல்லும் திண்டுக்கல் கரூர் ரயில்வே லைனுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் பாலம் அமைக்கும் பணி பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இவ்வழித்தடத்தில் செல்லும் அரசு, தனியார் பஸ்கள் 5 கி.மீ., சுற்றி செல்கின்றன. இதே போல் தான் கனரக வாகனங்களும் சுற்றி செல்கின்றன.
கோவிலுார் அடுத்துள்ள ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கோவிலுார் பகுதியில் இருந்து நுாற்றுக்கணக்கான மாணவர்கள் சென்று வருகின்றனர்.
முறையான பஸ் போக்குவரத்து இல்லாததால் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
அதேபோல் கோவிலுார் வாரச்சந்தை வரும் மக்களும் டூவீலர்களில் காய்கறிகள் கொண்டு வரும் விவசாயிகளும் பதிக்கின்றனர். தீயணைப்பு, 108 வாகனங்களும் இந்த வழித்தடத்தில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இப்பகுதி மக்களின் நலன் கருதி ரயில்வே சுரங்கம் பாதையை விரைந்து முடித்து பஸ் போக்குவரத்துக்கு வழி காண வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
நடந்து செல்லும் மக்கள்
இல.சக்திவேல், சமூக ஆர்வலர், வேடசந்துார்: கோவிலுார் அருகே செல்லும் ரயில்வே லைனுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
இந்த பணிகள் துவங்கி இரண்டு ஆண்டுகளாகியும் தற்போது பணிகள் நடைபெறாமல் கிடப்பில் உள்ளதால் இப்பகுதி மக்கள் போக்குவரத்து
பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். வேடசந்துாரில் இருந்து ஆர்.புதுக்கோட்டை வழியாக கோவிலூர் செல்லும் அரசு டவுன் பஸ்சில் சென்றபோது ரயில்வே லைனுக்கு அருகிலே நிறுத்தி ஆட்களை இறக்கி விடுகின்றனர்.
இதனால் அங்கிருந்து மக்கள் கோவிலுாருக்கு நடந்து செல்கின்றனர். சுரங்கப்பாதை பணிகள் முடியாததால் பஸ் போக்குவரத்து மட்டுமின்றி 108, தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட எந்த போக்குவரத்தும் இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் தான் வெகுவாக பாதிக்கின்றனர்.
நடவடிக்கையை காணோம்
வி.தர்மர், காங்., வட்டார தலைவர், குஜிலியம்பாறை: சுரங்கப்பாதை பணிகள் முடியாததால் பஸ் போக்குவரத்து இந்த வழித்தடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் வாடகை ஆட்டோக்களில் தான் சென்று வருகின்றனர்.கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு கூட வர முடியாமல் முதியவர்கள் தவிக்கின்றனர்.
ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க காங்., எம்.பி., ஜோதிமணி கலெக்டரிடம் கோரிக்கை வைத்தார்.
ரயில்வே துறையினர் காவிரி குடிநீர் குழாய் குறுக்கிடுவதாக கூறினர். கலெக்டரோ குடிநீர் குழாயை மாற்றியமைத்து பாலம் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இன்னும் எந்தப் பணிகளும் நடக்கவில்லை.