/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அடங்க மறுக்கும் இயந்திர பயன்பாட்டாளர்கள்
/
அடங்க மறுக்கும் இயந்திர பயன்பாட்டாளர்கள்
ADDED : ஜன 20, 2026 07:54 AM

குடியிருப்பு பகுதியில் பாறை தகர்ப்பால் அதிர்வு
கொடைக்கானல்: கொடைக்கானலில் அதிகாரிகளுக்கு அடங்க மறுத்து இயந்திர பயன்பாடு, பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படுவதால் குடியிருப்புவாசிகள் அச்சத்துடன் வசிக்கும் நிலை உள்ளது.
கொடைக்கானல் சுற்றுலாத்தலமாக உள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்த இந்நகரில் ஏராளமானோர் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர்.
இதில் ஆடம்பரமான பங்களாக்கள் உள்ளிட்ட கட்டுமானங்கள் அனுமதி பெற்றதை மீறி அதிகார பலத்தால் கட்டமைக்கின்றனர்.
இதற்கு கற்கள் தேவை என்று நிலையில் அனுமதியின்றி ஆங்காங்கே கம்பஷசர் மூலம் துளையிட்டு பாறைகள் வெடிவைத்து இஷ்டம் போல் தகர்க்கப்படுகிறது.
ஏற்கனவே இம்மலைப் பகுதியில் மலைத்தள பாதுகாப்பு விதிமுறைப்படி பாறை தகர்ப்பு, கம்ப்ரஷர், போர்வெல், மண் அள்ளும் இயந்திரம் உள்ளிட்ட பயன்பாட்டிற்கு அப்போதைய கலெக்டர் வள்ளலார் தடைவித்தார். இந்நடைமுறை தற்போதும் உள்ளது.
இரவு, பகலாக ஈடுபாடு இருந்த போதும் தற்போதைய அதிகாரிகள் இதை சாதகமாக பயன்படுத்தி சிண்டிகேட் அமைத்து தடை இயந்திர பயன்பாட்டை கவனிப்பு பெற்று அனுமதிக்கின்றனர்.
கொடைக்கானல் செல்லப்புரம் கல் ரோடு பகுதியில் சில தினங்களாக பாறைகள் வெடி வைத்து தகர்ப்பதும், இயந்திரம் மூலம் மண் சீரமைத்தல் பணி தாரளமாக நடந்து வருகிறது.
குடியிருப்புகள் இருந்த போதும் இரவு, பகலாக சர்வ சாதாரணமாக பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படுவதால் அதிர்வும், கற்கள் கூரையில் விழுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சிவனடி ரோடு, வில்பட்டி, பூம்பாறை, பெருமாள்மலை ரோட்டிலும் இது போன்ற பணிகள் நடக்கின்றன. இதற்கு வருவாய் துறை அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர். கனிம வளத்துறை அதிகாரிகள், கலெக்டர் கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆய்வு செய்து இது போன்ற பணிகளுக்கு கடிவாளம் இடவேண்டும். மேலும் இதற்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகளின் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற செயல்கள் கட்டுப்படுத்த முடியும்.
பேரழிவுக்கு வாய்ப்பு வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பொங்கல் தொடர் விடுமுறையை பயன்படுத்தி பாறை தகர்க்கப்பட்டுள்ள விவரம் தெரிய வந்துள்ளது.
இது குறித்து ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்டது.
தற்போதும் தொடர்ந்துள்ளதால் போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
இச்செயல் வயநாடு போன்ற பேரழிவை கொடைக்கானல் சந்திக்கும் என்பதற்கு எடுத்து காட்டாக உள்ளதால் இதை கண்காணித்து தடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.

