ADDED : ஜன 29, 2026 05:45 AM
திண்டுக்கல்: 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வி.ஏ.ஓ.,சங்கத்தினர் தற்செயல் விடுப்பு எடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசுப்பணிகள் பாதிக்கப்பட்டது.
வி.ஏ.ஓ.,அலுவலகங்களை நவீனமயமாக்க வேண்டும், பணி நிலைக்கு ஏற்ப சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி , திண்டுக்கல் கிழக்கு, மேற்கு தாலுகா அலுவலகங்கள், நத்தம், ஆத்துார், நிலக்கோட்டை, குஜிலியம்பாறை, கொடைக்கானல், வேடசந்துார், பழநி, ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் நடந்த இதற்கு மாவட்ட தலைமை நிலைய செயலாளர் லோகநாதன் தலைமை வகித்தார். வட்டத்தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
லோகநாதன் கூறுகையில்,'' மாவட்டத்தில் வி.ஏ.ஓ.க்கள் 250 பேர் நேற்று முதல் நாளை (ஜன.30 ) வரை 3 நாட்கள் தற்செயல் விடுப்பு எடுத்துள்ளனர். முதல் 2 நாட்கள் காத்திருப்பு போராட்டம் , நாளை சென்னையில் காத்திருப்பு போராட்டமாக நடத்தப்படுகிறது'' என்றார். போராட்டம் காரணமாக தாலுகா அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

