ADDED : மார் 02, 2026 07:21 AM
வடமதுரை: தென்னம்பட்டி ஊராட்சி பெரும்புள்ளி பகுதி வழியே கல்குவாரிகளில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு லோடு லாரிகள் அதிவேகத்தில் செல்வதை கண்டித்து கிராம மக்கள் ரோடு மறியல் செய்தனர்.
தென்னம்பட்டி ஊராட்சியில் உள்ள கல்குவாரிகளில் இருந்து பாறாங்கற்களை வெட்டி அருகிலுள்ள கிராமங்களில் செயல்படும் கல் உடைக்கும் தொழிற்சாலைகளுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. குறுகிய அகலமே கொண்டுள்ள கிராமப்புற ரோடுகள் வழியே லாரிகள் அதிவேகத்தில் செல்வதால் சில நேரங்களில் கல் துண்டுகள் ரோடுகளில் விழுவதால் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
இதனால் அதிருப்தியில் இருந்த பெரும்புள்ளி பகுதி மக்கள் ரோட்டை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். லாரி உரிமையாளர்கள் தரப்பில் இனிமேல் வேகம் குறைத்து பாதுகாப்பான முறையில் இயக்கப்படும் எனக்கூறவே மறியல் கைவிடப்பட்டது.

