/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மரங்களின் மகத்துவம் பரப்பும் தன்னார்வலர்கள்
/
மரங்களின் மகத்துவம் பரப்பும் தன்னார்வலர்கள்
ADDED : ஏப் 14, 2025 05:46 AM

உயிர்களின் அடிப்படை வாழ்வாதாரமாக இருப்பது தண்ணீர். இதன் மகத்துவத்தை உணர்த்தி பசுமை சூழலால் சுற்றுப்புறத்தை மீட்டெடுக்கும் முயற்சியில், பசுமை தமிழகம் அமைப்பின் தன்னார்வலர்கள் தனித்துவம் காட்டி வருகின்றனர்.
சமீபத்திய தலையாய பிரச்னையான தண்ணீர் தட்டுப்பாடு. காரணம் மழையின்மை மட்டுமின்றி அபரிமித பருவகால தாக்கமே அடிப்படை. இதற்கு மனித செயல்களும் முக்கிய காரணம். மரங்கள் அழிப்பு, செயற்கை உரம், பூச்சி மருந்துகள், பாலிதீன் எரிப்பு, மக்கா கழிவுகள், அதிகரிக்கும் வாகன புகை போன்றவற்றால் காற்று, நீர், வான், நிலத்தை மாசுபடுத்தி வருகிறோம். நிலத்தடி நீரை காப்பதிலும், உயர்த்துவதிலும் ஒவ்வொருவருக்கும் முக்கிய பங்கு உண்டு. மாவட்டத்தின் பல்வேறு தனியார் அமைப்புகள், பசுமையை வளப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆத்தூர், செம்பட்டி மட்டுமின்றி மாவட்டத்தில் பரவலாக, பசுமை தமிழகம் அமைப்பின் தன்னார்வலர்கள் மரக்கன்றுகளின் மகத்துவத்தை கூறும் விழாக்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் முனைப்பில் பல்வேறு பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இப்பணியில் அரசு பள்ளி ஆசிரியரான விஜய், கூலித்தொழிலாளி முருகேசன் தலைமையிலான ஆர்வலர்கள் குழு சொந்த முயற்சி மட்டுமின்றி, சொந்த செலவிலும் இதற்கான பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
கிராமப்புற உட்புற ரோடுகள், குளக்கரைகள், கண்மாய்கள் வாய்க்கால்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை இந்த அமைப்பு நடவு செய்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களில் ஆர்வமுள்ளவர்களை தேர்ந்தெடுத்து, மரக்கன்றுகளை வழங்கி, அவற்றை பராமரித்து வளர்ப்பது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.
பசுமையை உயர்த்த வேண்டும்
பா.விஜய், ஒருங்கிணைப்பாளர், காமுபிள்ளைசத்திரம்: 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர் பணியில் உள்ள சூழலில் பரவலாக செம்பட்டி, ஆத்தூர், சின்னாளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகளுக்கு மேல் இளைஞர்கள், பொதுமக்கள், மாணவர்களுடன் இணைந்து நடவு செய்துள்ளோம். சர்வதேச விண்வெளி வீரர் மட்டுமின்றி வீதியோர மனிதருக்கும் உயிர் மூச்சான ஆக்சிஜன் அவசியமாகும். நம் முன்னோர்கள் நடவு செய்ததன் பலனை, நாம் அனுபவித்தோம். நாளைய தலைமுறைக்கு நாம் விதைக்கும் நற்செயல்கள் மட்டுமே வாழ்வாதாரத்திற்கான குடிநீரையும், மூச்சுக்காற்றையும் அளிக்கும். வெப்பத்தின் அளவை பாரன்ஹீட், செல்சியஸ் என அளப்பதை ஒதுக்கிவிட்டு பசுமையை உயர்த்தி வெப்ப அளவை குறைக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு, ஒரு ஆசிரியர் ஒரு மரம் என்ற திட்டத்தை உருவாக்குதல், மாணவர்களின் மரம் நடவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். இது தவிர போதையில்லா உலகம் படைப்பது குறித்த, இளைஞர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறோம். நடவு செய்யப்பட்ட பனை விதைகளில் பெரும்பாலானவை, தற்போது 2 அடி உயரம் வரை பல இடங்களில் வளர்ந்திருப்பது ஊக்குமூட்டுவதாக அமைந்துள்ளது.
--பசுமையை பரிசளிக்கும் முயற்சி வேண்டும்
முருகேசன் தன்னார்வலர், பூதிப்புரம்: ரசாயன உரங்களாலும், கழிவுகளாலும் மண் மலடாகும் சூழலில் இருந்து பசுமை நிலையை மீட்டெடுக்க வேண்டியது அவசியமாகிறது.
குக்கிராமங்கள் தோறும் நீராதார கரைப்பகுதிகள், மரக்கன்றுகள் வளர்ப்பதை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறோம். மரம் வளர்ப்பு பசுமை சுழல் பராமரிப்பில் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் மூலம் தவறான வழிகளில் செல்வதை தவிர்க்கும் வகையிலான மடை மாற்றத்தை செயல்படுத்தி வருகிறோம்.
வீட்டில் மரக்கன்றுகள் வைக்க வசதி இல்லை, மரக்கன்று வாங்க பணம் இல்லை என்ற காரணங்களை புறந்தள்ளி தினமும் சில மணித்துளிகள் ஒதுக்கி அடுத்த தலைமுறைக்கான பசுமையை பரிசளிக்கும் முயற்சி வேண்டும். அடுத்த தலைமுறைக்கு ஆக்சிஜன் குடுவையை பரிசளிக்கும் அவலத்தை ஏற்படுத்தி விடக்கூடாது.

