ADDED : ஏப் 10, 2025 01:27 AM
ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் தர்ணா
ஈரோடு:ஈரோடு எஸ்.பி., அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தவர்கள், திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.அரச்சலுார் கூத்தம்பட்டி ஜே.ஜே.நகர் காளிமுத்து மகன் பண்டாரப்பன், 36. இவர் ஈரோடு எஸ்.பி., அலுவலகத்துக்கு, தன் குடும்பத்தினருடன் மனு கொடுக்க வந்தார். அவர்களை போலீசார் அமர சொல்லி மனுவை வாங்கி படித்து பார்த்தனர். இந்நிலையில் திடீரென அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், ஏ.டி.எஸ்.பி. விவேகானந்தனிடம் அழைத்து சென்றனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:நான், எங்கள் உறவினரான மாதப்பன் என்பவரிடம் இரண்டு லட்ச ரூபாய் கடனாக வாங்கி இருந்தேன். இதற்கு, ரூ.22 லட்சம் கட்ட வேண்டும் என்று என்னை மிரட்டி வருகிறார். மாதந்தோறும், ரூ.65 ஆயிரம் வட்டி கட்ட வேண்டும் என்று கூறி மிரட்டுவதாக கடந்த, 7ல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தேன். இதனை அரச்சலுார் போலீசார் விசாரிக்க கடந்த, 7 மாலை அழைத்தனர். நான் சென்றேன்.
அங்கு மாதப்பன் மற்றும் அவரது உறவினர்கள் ஆறு பேர் என்னை, என் தம்பிகளை, என் மனைவி, சகோதரனின் மனைவியை கை, கட்டை, கல் மற்றும் ஹலோபிளாக் கற்களால் தாக்கினர். இதில் அனைவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.