/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நிலத்தில் சாயக்கழிவு படிந்து மஞ்சளாக மாறிய 'போர்வெல்' நீர்
/
நிலத்தில் சாயக்கழிவு படிந்து மஞ்சளாக மாறிய 'போர்வெல்' நீர்
நிலத்தில் சாயக்கழிவு படிந்து மஞ்சளாக மாறிய 'போர்வெல்' நீர்
நிலத்தில் சாயக்கழிவு படிந்து மஞ்சளாக மாறிய 'போர்வெல்' நீர்
ADDED : ஜூன் 20, 2024 02:40 AM

ஈரோடு:ஈரோடு நசியனுார் சாலை, வெட்டுக்காட்டுவலசு, ஒண்டிக்காரன்பாளையம், வில்லரசம்பட்டி பகுதியில் ஏராளமான சாய, சலவை, பிளீச்சிங் ஆலைகள் செயல்படுகின்றன. இங்குள்ள பெரும்பாலான சாய ஆலைகள், கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்வதில்லை.
கழிவுநீரை தொட்டிகள், குழி தோண்டி பூமிக்குள் விடுவது, பைப்லைன் அமைத்து அதில் விடுவது போன்ற தவறுகளை செய்கின்றனர். இதனால், பல இடங்களில் சாயக்கழிவு கலந்த தண்ணீர், போர்வெல்களில் வருவது வாடிக்கையாகிறது.
ஒண்டிக்காரன்பாளையத்தில் பத்மநாபன் என்பவர், 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் வசிக்கிறார். அவரது வீட்டின் போர்வெல் குழாயிலிருந்து கிடைக்கும் தண்ணீரை குடித்தும், சமையலுக்கும் பயன்படுத்தி வந்தார்.
கடந்த, 15 நாட்களாக போர்வெல்லில் வரும் தண்ணீர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக, துர்நாற்றத்துடன் வருகிறது. இதுபோல, மேலும் பல வீடுகளிலும், சில நாட்களாக, சாயம் கலந்த தண்ணீர் ஆழ்குழாய்களில் வருவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பத்மநாபன் கூறியதாவது:
இந்த நீரை, 15 நாட்களுக்கு முன் வரை நேரடியாக குடித்தோம். தற்போது மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்துடன், கெமிக்கல் கலந்த துர்நாற்றத்துடன் வருவதால் குடிக்க முடியவில்லை. நேற்று முன்தினம் தண்ணீரை எடுத்து, ஆய்வு செய்ய கொடுத்து உள்ளேன்.
மேலும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் வந்து, இப்பகுதியை ஆய்வு செய்து தண்ணீரை சேகரித்துச் சென்று உள்ளனர்.
இப்பகுதியில் செயல்படும் ஆலைகளின் கழிவுநீரை, பூமிக்குள் செலுத்துவதால், நீரோட்டத்தில் கழிவுநீர் வெளியேறுகிறது.
பாதுகாப்பான நீர் கிடைப்பதை உறுதி செய்ய, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.