/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிறந்தது தமிழ் புத்தாண்டு கோவில்களில் களை கட்டிய வழிபாடு
/
பிறந்தது தமிழ் புத்தாண்டு கோவில்களில் களை கட்டிய வழிபாடு
பிறந்தது தமிழ் புத்தாண்டு கோவில்களில் களை கட்டிய வழிபாடு
பிறந்தது தமிழ் புத்தாண்டு கோவில்களில் களை கட்டிய வழிபாடு
ADDED : ஏப் 15, 2024 03:55 AM
ஈரோடு: தமிழ் ஆண்டுகளில் சோபகிருது முடிந்து, குரோதி ஆண்டு நேற்று பிறந்தது. இதையொட்டி ஈரோடு மாநகரில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
முன்னதாக மக்கள் தங்களது வீடுகளில் கனி, நகை, பணம் ஆகியவற்றை பூஜை அறைகளில் வைத்து வழிபட்டனர். பின்னர் அருகில் உள்ள கோவில் மற்றும் குலதெய்வ கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தனர்.
புத்தாண்டு பிறப்பையொட்டி ஈரோடு பெரியமாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கனி அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.
இதேபோல் ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், கஸ்துாரி அரங்கநாதர் கோவில், திண்டல் வேலாயுதசுவாமி கோவில், ஈரோடு மகிமாலீஸ்வரர் கோவில், காவேரிக்கரை சோழீஸ்வரர் கோவில், வ.உ.சி. பூங்கா ஆஞ்சநேயர் கோவில், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில், ஈரோடு கொங்கலம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சென்னிமலையில்...
சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு தொடங்கியது. மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது. அதிகாலை முதல் இரவு வரை மக்கள் கோவிலுக்கு வந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வந்ததால், அடிவாரத்திலிருந்து மலைக்கு செல்லும் ரோட்டில் வாகன நெரிசல் ஏற்பட்டது. சென்னிமலை கைலாசநாதர், மாரியம்மன், காமாட்சியம்மன், எல்லை மாகாளியம்மன், பிராட்டியம்மன், ஆஞ்சநேயர், பெருமாள், விநாயகர் மற்றும் பிடாரியூர், ஞான சாயி பாபா கோவில், முருங்கத்தொழுவு பிரமலிங்கேஸ்வரர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோல் அந்தியூர், பெருந்துறை, டி.என்.பாளையம் பகுதிகளில் உள்ள கோவில்களில், தமிழ் புத்தாண்டு வழிபாடு களை கட்டியது.
பஞ்சாங்கம் வாசிப்பு...
திருப்பூர் மாவட்டத்தில் பிரசத்தி பெற்ற, காங்கேயத்தை அடுத்த சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் அதிகாலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகம், பூஜை நடந்தது. தமிழ் புத்தாண்டு பிறப்பை ஒட்டி பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி, பக்தர்கள் மற்றும் கோவில் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. குரோதி ஆண்டில் பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள நன்மை, தீமை வாசிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

