/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மேம்பாட்டு பணிகளுக்காக வ.உ.சி., பூங்காவில் அளவீடு
/
மேம்பாட்டு பணிகளுக்காக வ.உ.சி., பூங்காவில் அளவீடு
ADDED : மார் 31, 2024 04:04 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி கட்டுப்பாட்டில் வ.உ.சி., பொழுது போக்கு பூங்கா மற்றும் சிறுவர் பூங்கா உள்ளது. இங்கு அனைத்து தரப்பு மக்களும் வந்து செல்லும் வகையில் சீரமைத்து, கூடுதல் வசதி செய்ய தொடர்ந்து கோரிக்கை விடப்பட்டது.
இதன்படி கடந்த ஆண்டு நவ., 27ம் தேதி, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை ஆணையாளருமான பிரகாஷ், வ.உ.சி., பொழுது போக்கு பூங்கா மற்றும் சிறுவர் பூங்காவை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதன் பிறகு பூங்காவில் ஏற்படுத்த வேண்டிய வசதி, மேம்பாட்டு பணி, மக்களின் வருகையை அதிகரிப்பது குறித்தும், மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தியுடன் பல்வேறு ஆலோசனை வழங்கினார். அதன் அடிப்படையில் வ.உ.சி., பொழுது போக்கு பூங்காவை மேம்படுத்த, அளவீடு செய்யும் பணி நேற்று நடந்தது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
பூங்காவை மேம்படுத்தும் திட்டம் தேர்தலுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. அதற்குள் தேர்தல் அறிவித்து விட்டதால் அளவீடு பணி மட்டுமே நடக்கிறது. தேர்தல் முடிந்ததும், தேவையான நிதி ஒதுக்கப்பட்டு மேம்பாட்டு பணி மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கூறினர்.

