ADDED : ஜூன் 21, 2026 04:20 AM
ஈரோடு:சித்தோடு
ஆவினில் இருந்து ஈரோடு மாநகருக்கு தினமும் மூன்று வண்டிகளில் ஆவின்
பால் பாக்கெட், பிளாஸ்டிக் பெட்டிகளில் வைத்து அனுப்பி
வைக்கப்படுகிறது. இதில் வரும் தொழிலாளர்கள், அந்தந்த பூத்களில்
இறக்கி வைத்து செல்கின்றனர். சமீப நாட்களாக பால் பாக்கெட்கள் அதிக
அளவில் திருட்டு போவதாக, முகவர்கள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து
அவர்கள் கூறியதாவது: மாநகரில் அதிகாலை, 3:00 மணி முதல், ஆவின் பால்
பாக்கெட்கள், அந்தந்த பூத்களில் இறக்கி வைக்கப்படுகிறது. அதன்
பின் முகவர்கள் சிறிது நேரம் கழித்து தான் பூத்களுக்கு வந்து
விற்பனையை துவங்குகின்றனர்.
இந்நிலையில் சமீபமாக மாநகரில்
பால் பாக்கெட் திருட்டு அதிகரித்துள்ளது. இந்த நடைமுறை பல ஆண்டாக
இருந்தாலும், சமீபமாக ஒட்டு மொத்தமாக திருடி செல்வது
அதிகரித்துள்ளது. மாநகரின் அனைத்து பகுதிகளிலும் இந்த திருட்டு
நடக்கிறது. பைக்கில் வந்து திருடி செல்கின்றனர்.
பல இடங்களில்
'சிசிடிவி' கேமராக்களை வைத்து திருடுபவர்களை கண்டுபிடித்து,
போலீஸ் ஸ்டேஷன்களிலும் புகாரளித்துள்ளோம். ஆனால் வழக்கை போலீசார்
எடுக்க மறுக்கின்றனர். பால் பாக்கெட்டிற்கு எல்லாம் பாதுகாப்பு
கொடுக்க முடியாது என்று கூறுகின்றனர். பல மாதங்களாக தொடரும்
இப்பிரச்னைக்கு ஆவின் நிர்வாகம், போலீசார் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
